டில்லி

ந்தியாவில் தயாராகும் கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அக்டோபர் 6 அன்று முடிவு எடுக்க உள்ளது.

உலக சுகாதார அமைப்பு இதுவரை அமெரிக்காவின் பிஃபிசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், பிரிட்டனில் ஆஸ்டிரா ஜெனிகா (கோவிஷீல்ட்), சீனாவின் சினோஃபார்ம், மற்றும் சினோவாக் ஆகிய கொரொனா தடுப்பூசிகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் அளித்துள்ளது.  இவற்றை போட்டு கொண்டவர்கள் அனைத்து உலக நாடுகளுக்கும் செல்ல முடியும்.

இதுவரை இந்தியாவில் 6 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்  அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் பிர்ட்டன் நிறுவனமான ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்னும் பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.  இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.  அடுத்ததாக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

இதில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது சில சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உயர்நிலை கூட்டம் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.