ஜெனிவா:
டந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது,” என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.

சீனாவில் கிளம்பிய புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 70 லட்சம் பேரை தொற்றியுள்ளது. 4,03,000-க்கும் அதிகமானவர்களை கொன்றுள்ளது. கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பா இந்த நோயின் மையமாக மாறியது, ஆனால் இப்போது அமெரிக்கா இவற்றை முந்தி முதல் இடத்தில் நீடிக்கிறது. கறுப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற தீவிர போராட்டங்களால் கொரோனா வைரஸ் தற்போது மேலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-

உலகளவில் கடந்த 10 நாட்களில் ஒன்பது நாட்கள் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,36,000-க்கும் மேல் பதிவானது. அதில் கிட்டத்தட்ட 75 சதவீதம் 10 நாடுகளிலிருந்து வந்தவை, அவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள்.

ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வருகின்ற போதிலும், உலகளவில் இது மோசமடைந்து வருகிறது. நிலைமை மேம்பட்டு வரும் நாடுகளில், மிகப்பெரிய அச்சுறுத்தல் கொரோனாவை வென்றுவிட்டோம் என்ற மனநிறைவு எண்ணம் தான். உலகளவில் பெரும்பாலான மக்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். எந்த நாடும் முயற்சியை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல.

உலக சுகாதார நிறுவனம் சமத்துவத்தையும் இனவெறிக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தையும் முழுமையாக ஆதரிக்கிறது. எல்லா வகையான பாகுபாடுகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம். உலகெங்கிலும் போராடும் அனைவரையும் பாதுகாப்பாக போராடுமாறு கேட்டுகொள்கிறோம். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால் முடிந்தவரை, மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது தள்ளியிருங்கள். கைகளை சுத்தம் செய்யுங்கள், முகக்கவசம் அணியுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.