சென்னை,
தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது, மாநில உரிமைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் இன்றைய கூட்டத்தில் பேசிய, தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன், பேசும் போது, தமிழக அரசு “மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது” என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டுபேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தி.மு.க. ஆட்சியில் தான் மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன என்றார். இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது,
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், திமுக காரணமாகவே முல்லை பெரியாறு உரிமைகளை தமிழக அரசு இழந்ததாக வும், அதை மீட்டுக்கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா என்று கூறினார்.
மேலும், காவிரி பிரச்சினையிலும்,, காவிரி உரிமையை மீட்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்றும், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுத்தார் என்று கூறினார்.
மேலும், முல்லை பெரியாறு அணையில் 136 அடியை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு மூலம் தீர்ப்பு பெற்றுத்தந்தார்” என்று தொடர்ந்து பேசினார்.
இந்நிலையில், திமுக முதன்மை செயலாளரும், காட்பாடி தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் குறுக்கிட்டு, “தனக்கு பேச அனுமதி வழங்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்கள் ரங்கநாதன், அன்பழகன் ஆகியோர் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். இதன் காரணமாக சபையில் கூச்சல் நிலவியது.
அதையடுத்து, திமுக உறுப்பினர்களை சபாநாயகர் எச்சரித்தார். இதற்கிடையில், ஓபிஎஸ் துரைமுருகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய துரைமுருகன், காவிரியில் உரிமையை பெறுவதற்காக அனைத்து நடவடிக்கை களையும் எடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த கலைஞர்தான் என்றும், ஜெ.உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்சினை தீரவில்லை என்றும், தி.மு.க. அரசுதான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்று கூறினார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதியால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது என்றும், அதுபோல, முல்லை பெரியாறு அணை தொடர்பாக முதலில் வழக்கு தொடர்ந்தவர் கருணாநிதி என்றும், , ஆனால் தீர்ப்பு வரும் போது ஆட்சியில் ஜெயலலிதா இருந்ததால், அவர்தான் காரணம் என்பதுபோல பேசுவதாகவும் கூறினார்.
ஓபிஎஸ்-சும், துரைமுருகனும் மாறி மாறி ஒருவர்ஆட்சி மீது ஒருவர் குற்றம் சாட்டி பரபரப்பாக பேசியது சட்டமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.