திருநங்கை

 ந்தியாவிலேயே முதன் முதலாக காவல்துறை உதவி ஆய்வாளராக ஆகியிருக்கிறார் திருநங்கை பிரித்திகா யாஷினி! இதையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் அவரது படங்களை பகிர்ந்து வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நேரில் திருநங்கைகளைப் பார்க்கும் போது நம்மில் எத்தனை பேர் அவர்களை மரியாதையுடன் பார்க்கிறோம்? 

இதற்குக் காரணம்.. திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லாததே! நம் குடும்பத்தில்கூட திருநங்கைகள் இருக்கலாம்.. உருவாகலாம்! மூன்றாம் பாலினமான அவர்களைப் பற்றி முழுமையாய் தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரை.

காலம் காலமாக கோசா, ஒன்பது, அலி, அரவாணி என்று பல்வேறு தரப்பட்ட அருவெறுக்கத்தக்க பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்கள்,  சமீப காலமாகத்தான் பெருத்தமான திருநங்கை என்ற பெயரில் அழைக்கப்பட ஆரம்பித்தனர்.  திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள்.

திருநங்கைகளைப்பற்றி சுருக் +  தெளிவாக சொல்ல வேண்டுமானால்  ‘‘ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்கள்” எனலாம்.

முதலில் ஒரு விசயம்.. இது அவர்களே வேண்டுமென்று நினைத்து மாறுவதில்லை.  இது, விடை சொல்ல முடியாத இயற்கையின் விளையாட்டு.

 

* மனதளவில் பெண்ணாக பருவமாற்றம் அடையும் போது அவர்களின் பிறப்பு உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி, பின் முறையான ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை அல்லது முன்னோர் அனுபவத்தின் மூலம் உறுப்பை நீக்கி விடுவார்கள்.

* உண்மையான ஆணுக்கு உறுப்பை நீக்கி விட்டால், அதோடு அவர்  மரணமடையே வேண்டியதுதான்.   ஆனால், திருநங்கைகளுக்கு அப்படி இல்லை. இதிலிருந்தே இவர்களது மாற்றம் இயற்கையின் விதிவசத்தால் நடப்பது என்பதை அறியலாம்.

* மனதளவில் பெண்ணுக்குரிய  உணர்வுகள்  இயல்பாகவே வந்து விடுவதால், பெண்களைப் போலவே ஆடை, அலங்காரம் ஆகியவற்றை செய்து கொள்வார்கள்.

* திருநங்கைகளோ ஆண் என்ற உடம்பில், பெண்ணுக்குரிய உணர்வுகளை அடக்கி வைத்திருந்தவர்கள்.  அந்த அடக்கி வைத்த உணர்வுகளை வெளிப்படுத்தும்போது கொஞ்சம் அதீததன்மை இருக்கும் அல்லவா.. அதுதான் அவர்கள் ஓவர் மேக் அப் போட்டுக்கொள்ள காரணம். இதை நாம் புரிந்துகொள்ளாமல் அவர்களை அருவெறுப்புடனும் வித்தியாசமாகவும் பார்க்கிறோம்.

* சமுதாயத்தின் புறக்கணிப்பின் காரணமாகவே வேறு வழியின்றி அவர்கள் பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.   .

*  பெண் தன்மை  உடலில் குடி கொண்டிருப்பதால், இயல்பாகவே இவர்களின் மார்பகமும்  பெண்களைப் போலவே கொஞ்சம் பெரிதாகி விடும். அப்படியே ஆகவில்லை என்றாலும் கூட, மருத்துவ முறையில் பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.

*  மனதளவில் பெண் தன்மை குடி கொண்டிருப்பதால் எதிர்பாலினமான ஆண்களின் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆகவேதான்  ஆண்களைச் சீண்டுகிறார்கள்.

 

 

* இவர்கள் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான வழிமுறைகள் ஏதும் இல்லை. அப்படி திருமணம் செய்து கொண்டால் அது ஒன்று ஹோமோ அல்லது லெஸ்பியன் அல்லது மனித இனம் மிருக இனத்துடன் கொள்ளும் உடற்புணர்ச்சி என்ற வகை பாலியல் உறவாக கருதியே, இச்செயலை இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 377 இன்கீழ், இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்ற வகையில் தண்டிக்கத்தக்க குற்றமாக சொல்லப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

* அன்பிற்காகவும், பாதுகாப்புக்காகவும் ஆணை நாடும்  திருநங்கைளின் பலவீனத்தால், இவர்களின் உழைப்பில் உண்டு களித்து, குடித்து கும்மாளமிடும்  ஆண்களும் இருக்கிறார்கள்.

திருநங்கைகள் இயற்கையாக எவ்வளவு பிரச்சினைகளை  சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள்.  அதுமட்டுமல்ல..  குடியிருப்பு, வேலை வாய்ப்பு, ஏன்… கழிப்பிடம் கூட அவர்களுக்கு பிரச்சினைதான்.

 

சரி, இப்போது தற்போதைய சம்பவத்துக்கு வருவோம்.   நீதிமன்றம் உத்தவிட்ட பிறகும், திருநங்கைகள் காவல் துறைக்கு ஏற்றவர்களா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.  ஆண், பெண் காவலர்களைவிட இவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பார்கள்.

பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிகுந்திருக்கும்.

மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.

குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதால்,  பிள்ளைகளுக்காக தவறான வழியில் சொத்து சேர்க்க கைநீட்ட மாட்டார்கள்.

திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்கிற  சுமை கிடையாது என்பதால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்படுவார்கள்.

அவர்களுக்கு சாதிமத  உணர்வுகள் இருக்காது.  ஆகவே  அவர்களது செயல்பாட்டில் ஓரு சார்பு இருக்காது.

உதவி ஆய்வாளர்  திருநங்கை பிரித்திகா யாஷினி அவர்களுக்கு ராயல் சல்யூட்!

– யாழினி