சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அடுத்தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் முக்கிய நபரான ரத்தீஷ் என்பவர் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி, அதிமுக தரப்பில் யார் அந்த தம்பி என கேள்வி எழுப்பி, சென்னை உள்பட பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே பேசும்பொருளாகி மாறி வருகிறது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர், போனில் சார் என சொல்லி ஒருவரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதை சுட்டிக்காட்டி, யார் அந்த சார் என அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த வாரம் இரண்டு நாட்கள் டாஸ்மாக் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதுடன், முறைகேடு தொடர்பாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.
இந்த விசாகனுக்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பும் அதிமுக, யார் அந்த தம்பி?’ என்று போஸ்டர் ஒட்டியும் ஹேஸ்டேக் போட்டும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் அமலாக்கத்துறையினர், ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக, டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
அதில், ‘டியர் தம்பி’ என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன. இதனை வைத்தும், டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே செயல்பட்டதாக விசாகன் கூறியதாக வெளியாகும் வாக்குமூலத்தையும் கேள்வி கேட்கும் வகையில் ‘யார் அந்த தம்பி?’ என்ற போஸ்டர் அதிமுகவினரால் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை, சேலம், மதுரை மற்றும் தமிழகம் முழுக்க, ‘யார் அந்த தம்பி?’ என்று பெரிதாக கேள்விக்குறி போட்டுள்ளனர். அதன்கீழே ‘டாஸ்மாக் காசு… எந்த தம்பிக்கு போச்சு?’ என்று ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று இந்த போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.