டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை அடுத்து ஆம் ஆதமி கட்சியைச் சேர்ந்த அதிஷி மார்லென் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

2015 முதல் டெல்லி முதல்வராக பதவி வகித்து வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மது கொள்கை விவகாரத்தில் 2014 மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவர் முதல்வர் அலுவலகம் செல்லக்கூடாது மற்றும் கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததை அடுத்து அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள அதிஷி மார்லென் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த இந்த ஆறு மாத காலம் அவரது நிழலாக ஆட்சியை நிர்வகித்த அதிஷி மார்லென் டெல்லியின் 8வது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

1981 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் பிறந்த அதிஷி மார்லென் பஞ்சாபி ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிஷியின் தாயார் பெயர் த்ரிப்தா வாஹி மற்றும் தந்தையின் பெயர் விஜய் குமார் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்.

கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீதான ஈடுபாடு காரணமாக மார்க்ஸ் மற்றும் லெனினிலிருந்து உருவான ‘மார்லென்’ என்ற வார்த்தையை அதிஷி தனது பள்ளி நாட்களில் தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார்.

அதிஷி டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல் பள்ளியில் படித்தார், அதன் பிறகு செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். DU இல் படித்த பிறகு, அவர் ரோட்ஸ் உதவித்தொகை பெற்றார் மற்றும் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பெற்றார்.

2012 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் போது அரசியலில் நுழைந்த அதிஷி மார்லென், ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் வேட்பாளராகவும் இருந்தார், ஆனால் அந்த தேர்தலில் அவர் பாஜகவின் கெளதம் கம்பீரிடம் தோல்வி அடைந்தார்.

பின்னர் 2020ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் தெற்கு கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு அதிஷி மார்லென் வெற்றி பெற்றார்.

2020 டெல்லி சட்டசபை தேர்தலின் போது, ​​தேர்தல் ஆணையத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்திருந்தார். தன்னிடம் ரூ.30,000 ரொக்கம் இருப்பதாகவும், வங்கி டெபாசிட்கள் மற்றும் எஃப்டிகளின் மொத்த மதிப்பு ரூ.1.22 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவிர, 5 லட்ச ரூபாய்க்கான எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என மொத்தம் ரூ.1.41 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.