புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய-சீன எல்லையைப் பற்றி நேற்று பேசியதோடு, பிரதமர் நரேந்திர மோடி 8,400 ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தை பற்றியும் விமர்சித்துள்ளார்.
நம் நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத கடுமையான குளிரிலும், சாதாரண கூடாரங்களில், எப்போது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர்… ஆனால் இந்த நிலமையில் பிரதமர் நரேந்திர மோடி 8,400 கோடி ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தில் சுற்றி பறந்து வருகிறார். இந்த நிலைமையிலும் சீனாவின் பெயரைக் கூட எடுக்க பயப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மற்றும் பிரதமர் பயன்படுத்தக்கூடிய விவிஐபி விமானம் அமெரிக்காவிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. இந்த சிறப்பு விமானத்தில் மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஆடியோ மற்றும் வீடியோ தகவல் தொடர்புகளை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு விமானங்களையும், வாங்குவதற்கான மொத்த செலவு 8,400 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் பேசியபோது விரைவில் “நல்ல நாள்” வரும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேலி செய்யும் விதமாக, சாதாரண கூடாரங்களில் கடும் குளிரில் நம் ராணுவ வீரர்கள் தத்தளித்து வருகின்றனர், “நல்ல நாள்” எப்போது வரும்? என்று ராகுல் காந்தி கேட்டுள்ளார்.