டில்லி:
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார்? என்று மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370ஐ மத்தியஅரசு விலக்கியது. அத்துடன் அந்தப் பகுதி இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூப முப்தி உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்ககோரி உச்சநீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ‘ஃபரூக் அப்துல்லா எங்கே?’ என்பது குறித்து வரும் 30ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.