ரவுண்ட்ஸ்பாய்
 
download (1)
 
காலை பத்து மணிக்கு பதிலாக பகல் 12 மணிககு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நேரமுறை, இன்றுமுதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த நேர மாற்றம் குடிகாரர்களிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிய சில டாஸ்மாக் கடைகளுக்கு விசிட் அடித்தோம்.
முதலில் நாம் சென்றது கோடம்பாக்கம் ராம் தியேட்டர் ( இப்போது திருமண மண்டபம்)  அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை.  நாம் சென்றபோது, காலை பத்து முப்பது.
சந்துக்குள் கடை இருப்பதால், வெளியில் கதவை பூட்டியிருந்தார்கள். பக்கத்திலேயே டீ கடை, புரோட்டா கடை எல்லாம் இருக்கிறது. ஆகவே அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் எந்த கடைக்காக வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை.
சும்மா பேச்சு கொடுத்து பார்ப்போம் என்று நடுத்தர வயதுக்காரர் ஒருவரிடம், கையை குடிப்பது போல் காட்டி, “எப்போ தெறப்பாங்கண்ணே” என்றேன்.
அவர், “உக்கும்…. இன்னிலேருந்து 12 மணிக்காமாம்.. காலையிலே வந்து ஒரு ரவுண்ட் போட்டு போய் வேலையை பார்க்கலாம்ணா… கெடுத்திட்டானுங்க..” என்றார் ஆதங்கத்துடன்.
இன்னும் வேறு யாரும் இதுபோல “வேலையை கெடுத்துக்கொண்டு” காத்திருக்கிறார்களா என்று பார்த்தால்.. அப்படி தெரியவில்லை.
டீ குடிக்கவும், சிகரெட் வாங்கவும், புரோட்டா சாப்பிடவும் வந்தவர்கள்தான் பலர் என்று புரிந்தது.
 
b
மகிழ்ச்சி… ஒட்டுமொத்த தமிழ்நாடே காலை எழுந்தவுடன் டாஸ்மாக் வாசலில்தான் நிற்கிறது என்பது போல அல்லவா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் அதிமுவைச் சேர்ந்த சரஸ்வதி, “ஒயின்ஷாப் இல்லேன்னா பலபேரு செத்துருவான்” என்று வேறு சொன்னாரே..
அதெல்லாம் பார்க்கும்பது, ஒரு டாஸ்மாக் கடைக்கு ஒருவர் காத்திருப்பது ஒன்றும் பெரிய விசயமல்லதானே!
அங்கிருந்து புறப்பட்டு, அடுத்து நாம் சென்றது வடபழனி சூர்யா மருத்துவமனை அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை. நேரம் 11. 20.
கடையும்,  பாருக்கு செல்லும் கதவு பூட்டப்பட்டிருந்தது. இங்கும் பலவித கடைகள் உண்டு. ஆனாலும் தனித்துவமான “களையுடன்” மூன்று பேர் நின்றிருந்தார்கள்.
விசாரிக்கலாம் என்று நினைத்தபோது, மூவர் அணியில் ஒருவர் நம்மிடம், “என்னா தலை 12 மணிக்குதானாமே.. தேவையில்லாத வேலை.. டென்சனை கிளப்புறானுங்க… “ என்றவர், எனது ஆமோதிப்பை எதிர்பார்த்தார்.  நானும் வேறு வழியின்றி “ஆமா.. தலை” என்று சொல்லிவைத்தேன்.
அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். மேலும் ஆறு பேர் வந்துவிட்டார்கள்.
a
ஊரில் இருந்து சென்னைக்கு வேலை விஷயமாக வந்தவர்கள் இருவர்.  காலையிலேயே நல்ல தகவல் கிடைத்துவிட்டதாம். அதைக் “கொண்டாடி”விட்டு ஊருக்கு பஸ் ஏற இருப்பதாக சொன்னார்கள். மூவர், தினக்கூலிகள். “சும்மா ஒரு கட்டிங் போட்டா வேலை ஒழுங்கா நடக்கும்” என்றார்கள். காலையிலேயே வேலைக்குப்போய் இடையில் கட் அடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதே ஏரியாவில் வெவ்வறு இடங்களில் வேலை இவர்களுக்கு.
12 மணிக்குத்தான் இனி கடை என்பது குறித்து இவர்களிடம் கொஞ்சம் டீப் ஆக பேசினேன். நேரம் தள்ளிவைக்கப்பட்டது குறித்து ஆதங்கப்பட்டாலும் மனதார இதை வரவேற்கிறார்கள்.
அதோடு, “இதனால பெருசா ஏதும் நல்லது நடந்துராது. உண்மையிலேயே கவர்மெண்டுக்கு அக்கறை இருந்தா நைட் சீக்கிரமா கடையை மூடட்டும். ஏன்னா, கூலி வாங்கிட்டு நைட் ஏழு, ஏழரைக்கு கடைக்கு போறோம். அப்பால பத்து மணி வரைக்கும் அங்கதான் கெடக்கோம். அந்த நேரத்தைக் குறைக்கணும்” என்றார்  கட்டிட  வேலை பார்க்கும் பாலு. (பெயர் மாற்றப்படவில்லை.)
சென்னைக்கு வேலை விசயமாக வந்திருக்கும் குமரன், “அதைவிட பாருங்களை மூடணும் பிரதர்.. இங்கே உக்காந்து செமயா ஏத்திகிட்டு, போதை திமிருல கையோடு பாட்டிலும் வாங்கிட்டுப்போறவங்க நிறையபேரு இருக்காங்க. பார் இல்லேன்னா, முத ரவுண்ட் அடிக்கவே யோசிப்பான்” என்றார்.
அதற்குள் நேரம் 12 மணியாக, கடை திறக்கப்பட்டது. இங்கே இருந்த ஆறேழு பேரோடு.. எங்கிருந்தார்கள் என்றே தெரியாத இன்னும் ஏழெட்டு பேர் பணத்தை நீட்டியபடி டாஸ்மாக் கம்பிகளுக்கு வெளியே தவம் கிடக்க ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்து கிளம்பிய நாம், சென்றது கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு.  பணி 12.40.
ஜகஜோதியாக களை கட்டியிருந்தது பார். அங்கிருக்கும் பார் மேன் ஒருவரிடம் பேச்சுகொடுத்தபோது, ஒரு மாதிரி பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்.
மது அருந்திக்கொண்டிருந்த குடிமகன் ஒருவர் நம்மை அழைத்து, “இங்க வந்து உக்கார்.. எல்லா வெவரமும் சொல்றேன்” என்றார்.
வேறு வழியின்றி உட்கார்ந்தோம்…  ஆனாலும் அருவியாய் தகவல்களைக் கொட்டினார்:
“இந்த பாரு..  இது கோயம்பேடு ஏரியா. வெளியூர் போறவன் பலபேரு வருவான். போறப்போ கொஞ்சம் போட்டுகிட்டு போவோம்னு இங்க வருவான். அதான் கூட்டம் பின்னுது.
ஆனா பொதுவா காலையில 10 மணிக்கு குடிக்க வர்றவன் ரொம்ப குறைச்சல். நூத்துக்கு ஒருத்தன்னு வையேன்.  ஸோ… காலை நேரத்தில கடையை ரெண்டு மணிநேரம் மூடுனதால எந்தவித நட்டமும் அரசுக்கு கிடையாது.
அதோட, இன்னிக்கும் காலையில பத்து மணிக்குள்ள குடிக்கிறவனுக்கு  சாராயம் கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கு… என்ன விலை கொஞ்சம் அதிகம். இதுவரைக்கும் 10 மணி வரைக்கும் அதிக வசூல் பண்ண பார் காரங்க, இனிமே 12 மணிவரைக்கும் வசூலிக்க போறாங்க… அதான்! அதனால பார் நடத்தறவங்களுக்கு இது வசதிதான்.
தவிர அரசுக்கும் வருமானமும் குறையாம, நல்லபேரும் எடுக்கறதுக்கு நடத்துற டிராமாதான் இது. இன்னும் அஞ்சு வருசத்துக்கு வேற எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க பாரு..” என்றார்.
நான் பார்த்தவரையில், 12 மணிக்குத்தான் கடை திறப்பாங்களா.. என்று யாரும் கைகால் நடுங்கி நிற்கவில்லை. வழக்கமாக காலையில் “கட்டிங்” போடும் சில தொழிலாளிகள், கொஞ்சம் டென்சன் ஆனாலும், “எலக்சன் மாதிரி நேரத்துல ரெண்டு மூணு நாள் கடை மூடிடறாங்க.. அப்பல்லாம் இந்த குடி நெனப்பே இல்லாம நிம்மதியா இருக்கேன்” என்றே சொல்கிறார்கள்.
பொதுவாக, “நிரந்தரமாக மதுக்கடைகளை மூடிவிட்டால், குடி நினைப்பே இருக்காது” என்பதே ஒயின்ஷாப்களில் குடித்துக்கொண்டிருந்தவர்களின் பலரது கருத்து.  “கடை இருக்கிறது..கையில் பணமும் இருக்கிறது..” என்கிற எண்ணம்தான் இவர்களை குடிக்கவைப்பதாக சொல்கிறார்கள்.
tamil_nadu_liquor_outlet_20061204
இந்த குடிக்கும் மனநிலை குறித்து மனநல மருத்துவர் சுப்பிரமணியிடம் கேட்டோம்.  அவர், “காலையில் குடிக்காமல் இருக்கமுடியாது என்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவர்களை திருத்த வேண்டுமே தவிர, குடிக்கவழி காண்பிக்கக்கூடாது.
இப்போது நேரம் குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விசயம்தான். இன்னமும் நேரத்தைக் குறைத்து மாலையில் மட்டும் மதுக்கடைகளை திறக்க வேண்டும்” என்றார்.
மதுக்கடையில் பணிபுரியும் தெரிந்தவர் ஒருவரிடம் இந்த நேரக்குறைப்பு குறித்து கேட்டதும் சிரித்தார்.
“படிப்படியா மதுவை ஒழிக்க இது  வழியில்லை. முன்னாடி காலையில எட்டுமணிக்கு கடையைத் திறந்தோம். அப்புறம்தான் பத்துமணிக்கு திறக்கணும்னு சொன்னுச்சு அரசு. அதனால டாஸ்மாக் வருமானம் குறைஞ்சுச்சா என்ன.. வருசா வருசம் அதிகமாகிட்டுதானே இருக்கு.. அதே மாதிரி வர்ற வருசம் பாரு…  இந்த வருசத்தைவிட அதிகமாத்தான் விற்பனை இருக்கும்” என்றார்.
என்னத்தைச் சொல்ல…!