மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்டில் உள்ள 82 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி தெரியவரும்.
தேர்தல் தேதி அறிவிப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை தலைமை தேர்தல் ஆணையரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலுக்கு 5 அல்லது 6 நாட்கள் முன்பாக பேட்டரி பொருத்தப்பட்டு அதில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிவேற்றப்படுகிறது.
இந்த செயல்முறை அத்தனையும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறும் நிலையில் மின்னணு இயந்திரத்தில் பொருத்தப்படும் பேட்டரியிலும் அவர்களின் கையெழுத்து பதிவு செய்யப்படுகிறது.
இதையடுத்து பூட்டி சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் இந்த இயந்திரங்கள் முகவர்கள் முன்பே மீண்டும் பிரிக்கப்படுவதுடன் இந்த நடைமுறை வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை தொடர்கிறது என்று கூறினார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மொபைல் போன் பேட்டரிகள் போன்று இல்லாமல் கேல்குலேட்டரில் பயன்படுத்துவது போன்ற ஒரு சிறிய அளவிலான பேட்டரி என்றும் கூறினார்.
தவிர, பேஜர்களைப் போல் தொலைத்தொடர்பு சாதனமாக இணைக்கப்படாத இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.