ஐதராபாத்:
ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் தலைநகர கட்டமைப்புக்காக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை விவசாயிகளிடமே ஒப்படைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடியில் முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு அமராவதியில் தலைநகர் கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வந்தது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும், அரசு ஊழியர் குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. பணியும் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.
50% சாலைகளும் போடப்பட்டுள்ளன. சாலைகளுக்காக மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
எனினும், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, இந்த தலைமைச் செயலக கட்டுமான திட்டத்தில் நில ஆக்கிரமிப்பில் முறைகேடு நடந்திருப்பதால், பணியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
உண்மை நிலை தெரியாமல், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்க மாட்டோம் என ஆந்திர உள்ளாட்சித் துறை அமைச்சர் போட்சா சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலக கட்டுமானத்துக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டது குறித்து ஆந்திர அரசுக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்றே தெரிகிறது.
கையகப்படுத்தியது மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்துதான் புதிய அரசு விசாரிக்க விரும்புகிறது என்கின்றனர் அதிகாரிகள்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 22 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதனை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க ஜெகன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர் வெங்டேஷ்வரலு, தலைநகரம் தான் ஒரு மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைக்கு அச்சாரம், தலைநகர் கட்டமைக்கும் பணியை நிறுத்துவது, மாநிலத்தின் வருவாயை பாதிக்கும்.
இது குறித்து விசாரணை நடத்திக் கொண்டே கட்டுமான பணியை தொடரலாம் என கூறியுள்ளார்.