குருகிராம், அரியானா
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய ஒரு தொழிலாளிகயை காப்பாற்ற சென்ற மூவர் மரணம் அடைந்துள்ளார்.
குருகிராம் என அழைக்கப்படும் குர்காவ் அரியானா மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை நகரமாகும். இங்கு பல சிறிய, பெரிய மற்றும் குறும் தொழிற்காலைகள் பெருமளவில் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் நகரில் மட்டும் இன்றி புறநகர் பகுதிகளிலும் பரவி உள்ளன. இங்கு பல மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
அந்த தொழிற்சாலைகளில் ஒன்று ஜெய் ஆட்டோ காம்பொனெண்ட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வினீஷ் என்னும் 25 வயது தொழிலாளி தொட்டியில் இறங்கி உள்ளார். மனிதர்கள் இறங்கி கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள போதும் அவர் அந்த வேலையை செய்யச் சொல்லி உள்ளனர். மேலும் அவருக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் தரப்படவில்லை. உள்ளே சென்ற வினீஷ் உள்ளே இருந்த விஷ வாயு தாக்கி மூழ்கத் தொடங்கி உள்ளார்.
வினீஷை காப்பாற்றுவதற்காக ராஜ்குமார், ரிங்கு மற்றும் நானே ஆகிய மூவரும் தொட்டியில் இறங்கி உள்ளனர். அவர்கள் வினீஷை காப்பாற்றி மேலே எடுத்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மூவரும் கழிவு நீர் தொட்டியில் மூழ்கினர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் மூவரும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதே இறந்து விட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. முதலில் மூழ்கிய வினீஷ் அதே மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
அந்த நிறுவனத்தின் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. உரிமையாளர் மற்றும் மேலாளர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. மரணமடைந்தவர்களின் உறவினர்களும் மற்ற தொழிலாளர்களும் நிர்வாகத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை அவர்களுக்கு கொடுக்கப்படாத நிலையில் வினீஷ் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அவரை சுத்தம் செய்ய சொன்னதாகவும், தீயணைப்புத் துறையை உடனடியாக அழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.