உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியின்போது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக முழக்கமிட்ட பாரதிய ஜனதா கட்சியினருக்கு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரியங்கா வழங்கினார்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியான கோரக்பூரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அதே போல் பாரதிய ஜனதா சார்பில் ஆக்ரா, பல்தேவ் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். டெல்லியை ஒட்டிய நொய்டாவில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, லக்னோவில் அனுராக் தாக்கூர் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பரப்புரையில் ஈடுபட்டு, வாக்குசேகரித்தார். அதே போல், சமாஜ்வாதி கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவர் ஜெய்ந்த் சவுத்ரி, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி புபேந்தர் ஹூடா உள்ளிட்ட தலைவர்களும் பரப்புரை மேற்கொண்டனர்.
வரும் 10ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அலிகார் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்களுக்கு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையான பார்தி விதானை பிரியங்கா வழங்கினார்.
தொடர்ந்து கைர் தொகுதியில் அவர் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். மேலும் ‘உத்தரப்பிரதேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸ் வருகிறது.’ என்ற வாசகங்களுடன், அலிகாரில் உள்ள மக்களை நோக்கி பிரியங்கா கையசைக்கும் படங்கள் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.