பெங்களூரு

சிகலா விடுதலை எப்போது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு  தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் விடுதலையாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நன்னடத்தை விதிகள் மூலம் அவர் விரைவில் விடுதலையாவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இருக்கும் சசிகலாவின் ரிலீஸ் எப்போது என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டதற்கு சிறைத்துறை நிர்வாகம் மழுப்பலாக பதிலளித்துள்ளது

தமிழக முதல்வராக  1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது,  அவர் பெயரைக்கூறி, அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலா தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கிக்குவித்தார்.

இதுதொடர்பாக அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக வழக்கு தொடர்ந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட அந்த வழக்கில், 2017ம் ஆண்டு, அந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம், மற்றவர்களுக்கு ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. பின்னர் அந்த தீர்ப்பை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலா சிறையிலடைக்கப்பட்ட பின்னர், தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களும் பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறின.

மேலும், கர்நாடகவில் நடைபெற்ற கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, சசிகலா தரப்பில் சிறை அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகளுக்கு  கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், அவ்வப்போது சிறைக்கு வெளியே விதிகளை மீறி சென்று வந்த தகவல் மற்றும் அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து  ஆய்வுசெய்த டி.ஐ.ஜி ரூபா மேலும் பல்வேறு தகவலைகளை  அம்பலப்படுத்தினார்.

இந்த நிலையில்,  சசிகலாவின் 4 ஆண்டு சிறைத்தண்டனையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவடையவுள்ளது.  முன்னதாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க அவரது குடும்பத்தினரும், டிடிவி தினகரன் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியும் அடுத்த ஆண்டு  (2021)  மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகங்கள்  கணித்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலாவின் ரிலீஸ் எப்போது, அவரை இதுவரை எத்தனை பேர், எத்தனை முறை சந்தித்துள்ளனர் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை   தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் எழுப்பியிருந்தார்.

இதற்கு பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளது. அதில்,

சிறை கைதிகளின் விடுதலை  என்பது, பல்வேறு சிறை விதிமுறைகளுக்குட்பட்டது மேலும், சிறை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது.

எனவே சசிகலா ரிலீஸ் ஆகும் தேதியை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில சிறைத்துறையின் பதில் தெளிவற்று இருப்பதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டி உள்ளார்.