காஷ்மீர்

இந்தியா கொரோனாவை எதிர்கொள்ள உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் (LOC) பகுதியை பார்வையிட்ட அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

“மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.

இந்தியா உலகிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது.

உலகம் முழுவதும் ஒன்றாக COVID-19 க்கு எதிராக போரிடும் வேளையில், பாகிஸ்தான் மட்டும் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கொண்டு அப்பாவி மக்கள் மீது போர் தொடுத்து வருகிறது. அதில் எட்டு வயதுச் சிறுவனும் பலியாகியுள்ளான்.

பல வீடுகள் துப்பாக்கிச் சூட்டில் தீக்கிரையாகி உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களுக்கான புகலிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

பாகிஸ்தான் தன்னை காஸ்மீரிகளின் நண்பன் எனக் கூறிக்கொள்கிறது. ஆனால் நண்பர்களை யாராவது கொல்வார்களா?

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் 1200 முறை எல்லை தாண்டி பயங்கரவாதத்தை நிகழ்த்தி உள்ளது. ஜனவரி 367, பிப்ரவரி 366, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கொரோனா தீவிரமடைந்த மார்ச் மாதத்தில் 411, ஏப்ரலில் 60 முறையும் தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த ஆண்டு இதுபோல் 919 , 2018 இல் 802 முறையும் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் மூன்று மாதங்களுக்குள் இவ்வளவு தாக்குதல் நடத்தியதன் பின்னால் பாகிஸ்தானின் சதி உள்ளது.

இதுபோன்ற தாக்குதலை நடத்தி கொரோனாத் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை திசைதிருப்பும் நோக்கமே ஆகும்”.

இவ்வாறு விரிவாகக் கூறிய ராணுவ தலைமை தளபதி, எல்லையில் இயல்பு நிலையை தக்கவைத்துள்ள ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.