மேற்கு ஆப்ரிக்க நாடான கேபானில், இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கோபம் அடைவார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த யானைகள் உணவுக்காக மட்டும் அல்ல, உடல்நலக் காரணங்களுக்காகவும் பயிர்களைத் தேடி வருகிறார்கள் என்று தெரிவிக்கிறது.

விவசாயிகள் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், யானைகள் வாழை, பப்பாளி செடிகளின் இலைகள் மற்றும் தண்டுகளை மட்டும் தின்றுவிட்டு, சாப்பிடக்கூடிய பழங்களை தரையில் உடைத்துவிட்டு செல்கின்றன.

“பழங்களை சாப்பிடாமல் சேதப்படுத்துவதால் விவசாயிகள் இன்னும் கோபப்படுகிறார்கள்,” என்று கேபானின் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு விஞ்ஞானி ஸ்டீவ் நகாமா கூறுகிறார்.

இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கலாம் என அவர் சந்தேகித்தார். ஏனெனில், வாழை, பப்பாளி இலைகளுக்கு மருந்து தன்மை உள்ளது என்பது முன்பே தெரிந்த விஷயம். அதனால், வயிற்றுப் புழுக்கள் போன்ற உடல் தொந்தரவுகள் ஏற்பட்டால் யானைகள் தாமாகவே இந்த செடிகளைத் தேடி சாப்பிடுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த சந்தேகத்தை உறுதி செய்ய, கேபான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு Ecological Solutions and Evidence என்ற அறிவியல் இதழில் கடந்த அக்டோபரில் வெளியானது.

2016–17 காலகட்டத்தில், நகாமா குழுவினர் யானைகள் புகுந்த பகுதிகளில் யானை மலம் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், வயிற்றுப் புழு தொற்று இருந்த யானைகளில் 16% அதிகமானவை வாழை இலைகளை சாப்பிடவும், 25% அதிகமானவை பப்பாளி செடிகளை சாப்பிடவும் முயன்றது தெரிய வந்தது.

இதனால், யானைகள் தாமாகவே நோய்க்கு மருந்தாக சில செடிகளைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதற்கு ஆதாரம் கிடைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எலோடி ஃப்ரெய்மேன், “இது உறுதியான முடிவு அல்ல. மனிதர்கள், மாடுகள் அருகே இருப்பதால் யானைகளுக்கு அதிக தொற்று ஏற்பட்டிருக்கலாம். ஆனால் யானைகளுக்கு மருந்து அறிவு இருப்பதில் சந்தேகம் இல்லை,” என்று கூறுகிறார்.

வாழை, பப்பாளி செடிகளில் புழுக்களை அழிக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்ற விலங்குகள் போலவே, யானைகளும் அனுபவத்தின் மூலம் எந்த செடி உடலுக்கு நல்லது என்பதை கற்றுக்கொண்டு, அதை தங்கள் கூட்டத்தினருக்கும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வு, யானை–மனித மோதலை குறைக்க உதவும் என நகாமா நம்புகிறார்.

“யானைகளுக்கு வேறு இடங்களில் மருந்துப் பொருட்கள் கிடைத்தால், அவை விவசாய நிலங்களுக்கு வராமல் இருக்கலாம்,” என அவர் கூறுகிறார்.

மேலும், யானைகளின் இந்த இயற்கை மருத்துவ அறிவு, மனிதர்களுக்கான புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும் உதவலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

“யானைகள் மிகவும் புத்திசாலி விலங்குகள். அவற்றிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்,” என்று நகாமா கூறுகிறார்.

[youtube-feed feed=1]