கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 25 மார்ச் முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, மக்கள் காய்கறி, மளிகை, மருந்து, வங்கி போன்ற அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து நாடுமுழுக்க நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, ரயில் போக்குவரத்தில் மட்டும் அரசு நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 700 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துவருகிறது.
மார்ச் 22 வரை 8.4 சதவீதமாக இருந்த வேலையில்லா இளைஞர்களின் தொகை, கடந்த இரு வாரத்தில் 15% அதிகரித்து தற்போது 23.4 சதவீதமாக உள்ளது. கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலை நம்பியுள்ளோர், சுமை தூக்கும் தொழிலாளிகள் என்று பலரும் வேலையை இழந்திருக்கும் நிலையில், ஊரடங்கு மேலும் நீடித்தால் 60 ஆண்டுகள் அல்ல பலநூறு ஆண்டுகள் கூட பின்னோக்கி செல்லக்கூடிய அபாயம் உள்ளது.
தொற்று நோய் உள்ள சமயத்தில் ஊரடங்கை எப்படி முழுமையாக விலக்க போகிறார்கள்,
- படிப்படியாக நாடு முழுக்க எந்த எந்த மாநிலங்களில் எந்தெந்த மாவட்டங்களில்
தொற்று பரவும் நிலை எப்படி இருக்கிறது - கடந்த வாரத்திற்கு இந்த வார நிலைமை என்ன
- மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை எப்படி அனுமதிப்பது
- போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேருந்து மற்றும் ரயில்களில் முன் போல் முழு கொள்ளளவில் மக்களை நெருக்கி இயக்கமுடியுமா
- உள்ளூர் போக்குவரத்துகளான மெட்ரோ ரயில், ஷேர் ஆட்டோ, ஆட்டோ போன்றவை இயங்குமா
- வேண்டுதலை நிறைவேற்ற காத்திருக்கும் மக்களுக்கு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுமா
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்குமா
- வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்களா
- கல்விக்கூடங்கள் வழக்கம் போல் செயல்படுமா
என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பல்வேறு துறையினரிடம் இருந்து விடை கிடைத்த பிறகே ஊரடங்கை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு முழுமையாக நீக்கப்படும் போது கடந்த கால தவறுகள் என்று சுட்டிக்காட்டப்பட்ட அனைத்தும் சரிசெய்யப்பட்டு புதிய உலகில் அனைவரும் உற்சாகமாய் செயல்படுவோம் என்று நம்புவோம்.