சென்னை: வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க  வேண்டும், அணிவிக்க தவறினால், ரூ. 1000 அபராதம்  விதிக்கப்படும் ன சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் தெருநாய்களால், பலர் நாய்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், மாடுகளால் சில நேரங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. வீட்டில் இருந்து வெளியில் செல்லும் நாய்கள், மாடுகள், தெருவில் நடந்து செல்லும் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை விடாமல் விரட்டுவதும், முட்டி தாக்குவதும் போன்ற அச்சமூட்டும், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.  இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் புகார் அளித்து வந்தனர்.

தெருவில் சுற்றும் நாய்கள், மாடுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் தான் சென்னை பெருநகர மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விதிமுறைகளை கடுமையாக முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் வளர்ப்பு நாய்களை பொதுவெளியில் அழைத்து வரும் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவித்து வர வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணியாமல் பொதுவெளியில் அழைத்து வரும் நபர்களுக்கு குறைந்தது ரூ.1,000 முதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள், தெருநாய்களாலும் இதுபோன்ற பிரச்சினை வருவதாகவும், எனவே அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல,  ரோட்டில் அலையும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சிக்கும் வாய் மூடி அணிவிக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் அவர்களுக்கு ஒரு நாய்க்கு தலா 1000 என்று அபராதம் விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.