‘வாட்ஸ்அப்’ நிறுவனம் தனது இருநூறு கோடி பயனர்களுக்கு புதிய பயன்பாட்டு கொள்கையை அறிவித்திருக்கிறது, இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் தங்கள் சேவையை தொடரமுடியாத என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், மாற்று செயலிகள் குறித்து தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டும் பயனர்களுக்கு, ‘சிக்னல்’ எனும் தகவல் பரிமாற்ற செயலியை பரிந்துரைத்திருக்கிறார், உலகின் முதல் கோடீஸ்வரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்.

இது குறித்து தனது ட்விட்டரில் ‘யூஸ் சிக்னல்’ என்ற இரு வார்த்தைகளில் அவர் பதிவிட்ட ட்வீட் வைரலானதை தொடர்ந்து, உலகம் முழுவதும் இருந்து பலரும் இந்த செயலியை தரவிறக்கம் செய்துவருகின்றனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்ய முயற்சித்ததால், இத்தனை பெரிய வரவேற்பை சற்றும் எதிர்பாராத ‘சிக்னல்’ சர்வர்கள் சோர்வடைந்தன.

சிக்னல் நிறுவன அதிகாரிகள், சர்வர் குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

எலோன் மஸ்க்-கின் பதிவு ஏற்படுத்திய தாக்கத்தால், சிக்னல் செயலிக்கு கிடைத்த வரவேற்பு வாட்ஸ்அப் நிறுவனத்தின் வயிற்றில் புளியை கரைத்திருப்பதோடு, கணிசமான பயனர்கள் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிகிறது.