அரசியல் கட்சி தொடர்பான நடிகர் ரஜினியின் முடிவை, திமுக, அதிமுக மற்றும் வேறுபல இடதுசாரி முகாம்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வரவேற்கிறார்கள்.

அதேசமயம், அவரின் வருகையை பெரிதாக எதிர்பார்த்த பலரில், சிலர் அப்படியே மெளனமாகிவிட, சிலர் தங்களின் கடுமையான ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ரஜினிக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை இருந்ததாகவும், அதனாலேயே அவர், மக்கள் எழுச்சி வரும்வரை காத்திருப்பேன் மற்றும் தான் முதல்வர் பதவியேற்கப் போவதில்லை என்பன போன்ற வசனங்களை உதிர்த்து, மக்கள் மத்தியில் என்னமாதிரியான ரியாக்சன் கிடைக்கிறது என்று நூல்விட்டுப் பார்த்தார் என்கின்றனர் சிலர்.

பலரோ, அவர் பாரதீய ஜனதாவின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டலின் விளைவாகத்தான், வேண்டாவெறுப்பாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, பாஜக அளித்த ஆஃபரான அர்ஜுன மூர்த்தியையும் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அவர், காவிக் கட்சிக்கு, ஜஸ்ட் 6 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று கருத்துக் கூறிவந்தனர்.

இன்னும் சிலர், பொறுத்திருந்து பார்ப்போம். எதையும் இறுதியாக தீர்மானித்து விடவேண்டாம் என்றெல்லாம் ஆரூடம் கூறி வருகின்றனர்.

தமிழருவி மணியனோ, தன் பாணியில் ஒரு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விடைபெற்றுள்ளார். பார்ப்போம், இன்னும் எத்தனை நாட்கள் ஓய்வில் இருக்கப் போகிறார் என்று!

எது எப்படியோ, ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்துவிட்டது. அவர்கள் தங்கள் மனதை தேற்றிக் கொள்வது குறித்து யாரும் கவலைப்பட்டு மாயத் தேவையில்லை.

மொத்தத்தில், ரஜினியின் இந்த அறிவிப்பு, தமிழக தேர்தல் களத்தை, சில உருப்படியான நகர்வுகளை நோக்கி முன்னெடுத்துச் சென்றுள்ளது என்பதை நினைத்து நாம் சந்தோஷப்படத்தான் வேண்டும்.

இல்லையென்றால், உருப்படியான எந்த விஷயத்தையும் வெகுஜன ஊடகங்கள் பேசாது. “ரஜினி இன்று அதிகமாக மூச்சுவிட்டார், அவருக்கு கொஞ்சம் மலச் சிக்கல், இன்று பச்சை வண்ண உடை தரித்திருக்கிறார், இன்னாரை இன்னின்ன பதவிகளுக்கு நியமித்து வருகிறார், ரஜினியுடன் இவர் இணைந்தார்; அவர் இணைந்தார்” என்று அவரையே மையம் வைத்து, இந்த ஊடக கும்பல் சுற்றிக்கொண்டு திரியும்.

ஆனால், இனிமேல் சில முக்கியமான பிரச்சினைகள் முன்னிறுத்தப்பட்டு, அதன் வழியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளது. தமிழகத்திற்கான திராவிடப் பாதுகாப்பின் கால நீட்சிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்ற நிலை உருவாகியுள்ளது!