திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பால பாஸ்கர், கடந்த 2018ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிகழ்வு, சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளதையடுத்து, இதுவரையான நிலவரம் என்ன? என்பதை அலசலாம்.
தனது குடும்பத்துடன் திருச்சூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவரும் அவரின் இளைய மகளும் மரணமடைந்தனர்.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன், பாலபாஸ்கரின் குடும்பத்திற்கு இருந்த தொடர்பு காரணமாக, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணை தொடர்பாக, பாலபாஸ்கருடைய மனைவியின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது சிபிஐ. இந்த விபத்தில், பாலபாஸ்கர் மனைவி லட்சுமியும், டிரைவர் அர்ஜுனும் உயிர் பிழைத்தனர்.
ஆனால், அந்த விபத்து குறித்து, அந்த இருவரின் வாக்குமூலங்களிலும் முரண்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது அர்ஜுன்தான் காரை ஓட்டினார் என்று லட்சுமியும், ஆனால், விபத்து நடந்தபோது தான் சற்று ஓய்வெடுத்துக்கொள்ள, பாலபாஸ்கர்தான் காரை ஓட்டிச்சென்றார் என்று அர்ஜுனும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதன்பிறகு, அர்ஜுன்தான் காரை ஓட்டியிருக்கிறார் என்று கிரைம் பிரான்ச் குறிப்பிட்டது. அதேசமயம், மருத்துவமனை அறிக்கைகளிலும் பாலபாஸ்கர் காரை ஓட்டவில்லை என்று பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, பாலபாஸ்கருக்கு 10 நிமிடங்கள் நினைவு திரும்பி, தனது மனைவி மற்றும் மகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், சினிமா கலைஞரான கலாபவன் சோபி, பாலபாஸ்கரின் மரணம் ஒரு விபத்தல்ல என்றும், ஒரு திட்டமிட்ட கொலை என்றும் கூறியுள்ளவர், அதற்கு தான் கண்ணால் கண்ட சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலபாஸ்கரின் கார் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் காரின் கண்ணாடியை உடைத்ததை தான் பார்த்ததாக அவர் கூறுகிறார். ஆனால், அவரின் வாக்குமூலம் இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்கக் கடத்தலில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிஎஸ் சரித்தை விபத்து நடந்த இடத்தில் தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலபாஸ்கரின் உதவியாளர்கள் பிரகாஷ் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 40 கிலோ தங்கத்துடன் பிடிபட்டபோது இந்த சந்தேகம் இன்னும் வலுவடைந்தது. இந்த இருவரும், மொத்தம் 10 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு, வளைகுடாவிலிருந்து 200 கிலோ தங்கத்தை கேரளாவிற்கு கொண்டு வந்தனர் என்று வருவாய் புலனாய்வு இயக்குநரக விசாரணையில் தெரியவந்தது.
பாலபாஸ்கரின் இந்த இரண்டு உதவியாளர்களும், கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
அதேசமயம், மீடியா விவாதங்களில் பங்கேற்கும் பாலபாஸ்கரின் குடும்பத்தினர் இந்த விபத்து தொடர்பாக தங்களின் சந்தேகங்களைத் தெரிவிக்கிறார்கள். விபத்து குறித்து, தங்களுக்கு மிக தாமதமாகவே தகவல் வந்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விபத்தில் சிக்கிய பாலபாஸ்கரை, எந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்ற முடிவை, பிரகாஷ் தம்பி உள்ளிட்ட சிலர் எடுத்தனர் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
விபத்து நடந்த இடத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள, அதிகம் வெளியில் தெரியாத அனந்தபுரி மருத்துவமனைக்கு எதற்காக பாலபாஸ்கர் கொண்டு செல்லப்பட வேண்டும்? ஆனால், சம்பவ இடத்திலிருந்து அதே தொலைவிலிருந்த புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளான ஸ்ரீ சித்ரா, கேஐஎம்எஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு எதற்காக அவர் கொண்டு செல்லப்படவில்லை? என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.
நன்றி: த நியூஸ் மினிட்