புதுடெல்லி: நிஜாமுதீன் மத மாநாடு தொடர்பாக, பத்திரிகைகள் பொய் பரப்புரைகளை மேற்கொள்வதை தடைசெய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில், பத்திரிகைகளின் குரலை ஒடுக்க முடியாது என்று பதிலளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டெல்லியில் கடந்த மாதம், தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியது குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக, ஜமாத் உலேமா ஹிந்த் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், பத்திரிகைகளில் ஒரு பிரிவினர், கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்பது போல, பொய் செய்திகளை வெளியிட்டு, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். இது, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. எனவே, இதுதொடர்பான செய்திகளை வெளியிடுவதிலிருந்து பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, ‘வீடியோ கான்பரன்ஸிங்’ வாயிலாக விசாரித்தது.
அப்போது, “பத்திரிகைகளின் குரலை நாங்கள் ஒடுக்க மாட்டோம். அதனால், செய்திகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில், இந்திய பிரஸ் கவுன்சிலை சேர்க்குமாறு மனுதாரர் விண்ணப்பிக்கலாம். வழக்கு விசாரணை, இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்றது அமர்வு.