டில்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு  வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்க மத்திய பா.ஜ.க அரசு  முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகளை வாபஸ்பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, பாராளுமன்ற இரு அவைககளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகளை வாபஸ்பெறுவதாக அறிவித்து உள்ளார். இது காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசியல் சாசன சட்டம் 370 என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்…

வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் ராணுவம் ஆகிய துறைகளை தவிர பிற துறைசார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை யின் சம்மதத்துடன் இயற்றாவிடில் அது இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற மாநிலங்களில் காஷ்மீர் மக்கள் சொத்துகளை வாங்கலாம்.

வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அவர்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், வெளிமாநில பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் காஷ்மீரைச் சேர்ந்த ஆண்களுக்கு இது பொருந்தாது.

மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி.

1954ம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய குடியரசுத் தலைவரின் ஆணைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 இணைப்பு (1)ல் அரசியலமைப்பு சட்டம் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.

35A என்ன சொல்கிறது?

1. 35ஏ பிரிவின் மூலம், ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் உரிமை உண்டு.

2. வெளி மாநிலத்தவர்களால் காஷ்மீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற முடியாது.

3. ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையை தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது.

4. சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காஷ்மீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தை தருகிறது சட்டம் 35A.

சுதந்திரத்திற்கு முன்பு , ஆரம்ப காலத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு தனிக் கொடி, அரசியல் சாசனங்கள் என சுயாட்சி கொண்ட மாநிலமாக இருந்ததாக கூறப்படுகிறது.. பின்னர் இந்திய நாட்டுடன் இணைந்ததை அடுத்து, மற்ற மாநிலங்களை போன்று இல்லாமல், அப்போதைய மகாராஜா ஹரிசிங் விதித்த நிபந்தனைகள் படி சில சிறப்பு அந்தஸ்துகள் அம்மாநிலத்துக்கு மட்டும் வழங்கப்பட்டன.

அதன்படி, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவில் உள்ள 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் ஜம்மு காஷ்மீருக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரை பாகிஸ்தானும் உரிமை கொண்டாடி அவ்வப்போது தகராறு செய்து வரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற மோடி அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாப்பு ஏற்படும், வன்முறை வெடிப்பதற்கானசாத்தியக் கூறுகள் உள்ளன.

இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக  காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.