நியூடெல்லி: 2017ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் குற்ற அறிக்கை, தேசிய குற்றப் பதிவு பணியகத்தால் வெளியிடப்பட்டது. இதில், அரசுக்கெதிரான குற்றங்கள் 30% அளவிற்கு உயந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ள குற்றங்கள் 9,013 ஆக எகிறியுள்ளது. 2016இல், இது 6,986ஆக இருந்தது. இதில் அதிகப்படியான குற்றங்கள் ஹரியானா மாநிலத்தில் (2,576) பதிவாகியுள்ளது. அடுத்ததாக, உத்தர பிரதேசம் (2,055), அதன் பின் தமிழ்நாடு (1,802) என்பதாகப் பட்டியல் நீள்கிறது.

அத்துடன், 2017 இல் 57 சம்பவங்கள் தேசத்துரோகக் குற்றங்களாகப் பதிவாகியுள்ளன. 24 சம்பவங்கள் பூசல்களை விதைத்து, தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவித்ததாகவும், ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் 18ம், சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் 904 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2017 இல் இந்தியா முழுவதும், 16,170 சம்பவங்களைக் காவல்துறை விசாரிக்க எடுத்துக் கொண்டிருந்தது. இதில், 7,154 சம்பவங்கள் 2016 இலிருந்து நிலுவையிலிருந்தவைகளாகும்.

இதுபோன்று 421 சம்பவங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும், அதில் அதிகபட்சமாக 317, மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. 652 சம்பவங்கள் இடதுசாரி தீவிரவாதிகளாலும், 377 சம்பவங்கள் ‘ஜிஹாதி‘ தீவிரவாதிகளாலும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

2017 இல் 21,000 சைபர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது, அதன் முந்தைய வருட புள்ளி விவரமான 12,317 லிருந்து எகிறியுள்ளது. இந்த குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 4,242 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், தேசிய குற்றப் பதிவு பணியகம், குற்றங்களை மேலும் 88 வகைகளாகப் பிரித்து பட்டியலில் சேர்த்துள்ளது. இதில், பணியிடம் மற்றும் போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், தேர்தல் சம்பந்தமான குற்றங்கள்,, பொது இடங்களின் சூழல் கேடு, பொய்யான தகவல் பரப்புதல், சீட்டு கம்பெனி, ஊழல் பாதுகாப்பு, மனநலம், ஒலி மாசு, பொது சொத்துக்கு சேதம் என்பன இதிலடங்கும்.

மேலும், ‘தேச விரோத சக்திகள்‘ என்ற புதிய வகையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஜிகாதி தீவிரவாதிகள், இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் வடகிழக்கிலிருக்கும் நாட்டுக்கெதிரான போர் தொடுப்பவர்கள் என்பன அடங்கும்.

ஆனால், உள்துறை அமைச்சகம், விசாரணையின்றி செய்யப்படும் கொலைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற சில குற்றங்கள் குறித்து என்.சி.ஆர்.பி க்குக் கிடைத்தத் தகவல்கள் “நம்பத்தக்கவையாக இல்லையென்றும், மேலும் அவற்றின் வரையறைகளும் தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கின்றன“, என்றும் கூறுகிறது.