மதுரை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு தொடர்ந்து 3வது மாதமாக பரோல் வழங்கி வருகிறது. அதே வேளையில் மற்ற குற்றவாளிகளான நளினி, முருகன் உள்பட சிலர் பரோல் கேட்டுமனுத்தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு பரோல் வழங்க மறுத்து வருகிறது. இது ராஜீவ்கொலை கைதிகளுக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி 27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 3 மாத சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்துள்ளேன். அவருக்கு சாதாரண விடுப்பு வழங்க பரிசீலனை செய்ய இயலாது என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு நபருக்கு தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்கி உள்ளது. எனவே, ரவிச்சந்திரனுக்கு 2 மாதகால சாதாரண விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் மற்றொருவருக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.