
புதுடெல்லி: தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை, பாதுகாப்பு பொதுத்துறை யூனிட்டுகளாக மாற்றுவதற்கான திட்ட வரையறையை இறுதிசெய்ய ஒரு உயர்மட்ட கமிட்டியை மத்திய அரசு விரைவில் அமைக்கும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கமிட்டியில் மத்திய அமைச்சர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியை அமைப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் கேபினட்டை அணுகும் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 41 ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்களை கார்ப்பரேட் மயமாக்குவது என்பதை நரேந்திர மோடி அரசாங்கம் கொள்கையாக வைத்துள்ளது. அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன்களை அதிகரித்தல், அதன் போட்டித் திறன்களை கூர்மையாக்குதல் மற்றும் ஏற்றுமதி ஆற்றலையும் பெருக்குதல் போன்றவற்றுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.
இந்த தொழிற்சாலைகள், டாங்கிகளிலிருந்து பீரங்கிகள் முதற்கொண்டு பல்வேறு ஆயுதங்களை உற்பத்தி செய்து, மிக முக்கியமாக, இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசின் இந்த முடிவை எதிர்த்து, அவற்றில் பணியாற்றும் சுமார் 60,000 தொழில்துறை பணியாளர்கள் ஒரு மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]