சென்னை: தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் குழந்தைகள் கல்வி நிலை என்ன?  என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி ஆண், பெண் என ஏராளமானோர் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் ஏராளமான குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. சில வழக்குகளில் பெற்றோர்கள் இருவருமே சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால், கல்வி பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் குழந்தைகள் கல்வியை தொடருகின்றனவா? அவர்களின் நிலைமை எப்படி உள்ளது? சட்டப்படி அவர்களுக்கு கல்வி உள்பட அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.