சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டில் விளக்கி உள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடங்கி வைத்தார் சபாநாயகர். தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். ஏற்கனவே இடைக் கால பட்ஜெட் கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் வருவாய் நிலை குறித்து தெரிவித்திருப்பதாவது,

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் 2021-22 ஆம் ஆண்டில், இந்திய பொருளாதாரம் நிலையான முன்னேற்றப் பாதை யில் 8.95 சதவீத வளர்ச்சியை எதிர் நோக்கியுள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. அதாவது 4.16% ஆக இருந்த வருவாய் பற்றாக்குறை 3.08% ஆக குறைகிறது.

2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது.

இருப்பினும், இனி வரும் ஆண்டுகளில், இந்த வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான விலையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீடு 2021-22 ஆம் ஆண்டிற்கு 7.85 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரம் மீண்டு வருவதைக் காட்டுகிறது. இது முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நீடித்த கொள்கை முடிவுகளை செயற்படுத்துதல் போன்ற அரசின் முதன்மையான செயல்பாடுகளால் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடப்பாண்டு கணிப்புகளைக் காட்டிலும் எதிர் வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை அடைவோம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியானது, 2022-23 ஆம் ஆண்டில் 14.0 சதவீதமாகவும் 2023-24 ஆம் ஆண்டில் 14.0 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி உதவி உள்பட மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் 2021-22 ஆம் ஆண்டின் திருத்த வரவு செலவு மதிப்பீடுகளில் கணிக்கப்பட்ட வரவினம் 2,03,878.17 கோடியைக் காட்டிலும் 2022-23 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,31,407.28 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகள் 2023-24 ஆம் ஆண்டில் 2,79,059.26 கோடி ரூபாயகவும் 2024-25 ஆம் ஆண்டில் 3,19,298.09 கோடி ரூபாயகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு 20.59 சதவீதம் மற்றும் 14.42 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. இதன் முக்கியக் கூறுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் மாநில அரசின் சொந்த வரி வருவாய், 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 1,21,857.55 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. 2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது 1,42,799.93 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2023-24 ஆம் ஆண்டில் 1,78,499.91 கோடி ரூபாயாகவும், 2024-25 ஆம் ஆண்டில் 2,05,274.89 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசின் சொந்த வரி வருவாயின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் தொடர்புடைய அனுமானங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:-

பொருட்கள் மற்றும் சேவைகள் வரியைப் பொறுத்தமட்டில், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறை 30.6.2022 ஆம் நாளுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் மாநிலம் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு சாத்தியமான வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் பெருந்தொற்றிற்குப் பின்னர் மாநிலத்தின் நிதிகள் தற்போது மீளத் தொடங்கியுள்ளது. இழப்பீட்டை அளிக்கும் செயல்பாடு நீட்டிக்கப்படவில்லையெனில், மாநிலத்தின் நிதிகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு சுமை ஏற்படும். ஒன்றிய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான நிலுவை களை உரிய நேரத்தில் வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க் கிறோம்.

2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 50,397.82 கோடி ரூபாயாக மதிப்பிடப்படுகிறது.

பெட்ரோலியம் பொருட்களிலிருந்து பெறப்படும் விற்பனை வரி வரவினங்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பிடத் தக்க அளவிற்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடான 91,840.45 கோடி ரூபாய்க்கு மாறாக, 2022-23 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிக வரிகளின் வருவாய் 1,06,765.22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. வணிக வரியின் வளர்ச்சி விகிதம் தற்போதைய போக்கின் அடிப்படையில் 2023-24 ஆண்டில் 25.0 சதவீதமாகவும் 2024-25- ஆம் ஆண்டில் 15.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடான 8,167.28 கோடி ரூபாய்க்கு மாறாக, 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில ஆயத்தீர்வைகளின் வருவாய் 10,589.12 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய வரி வசூல் போக்கின் அடிப்படையில், மாநில ஆயத்தீர்வைகளில் 2023-24 ஆம் ஆண்டில் 25.0 சதவீத மும் மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் 15.0 சதவீதமும் கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 14,325.19 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வரவுகள், 2022-23 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு களில் 16,322.73 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வீட்டு மனை விற்பனை துறையில் அதிகரித்துள்ள தேவையின் அடிப்படையில் 2023-24 ஆண்டில் 25.0 சதவீத வளர்ச்சி இருக்கும் எனவும் 2024-25-ஆம் ஆண்டில் 15.0 சதவீத வளர்ச்சி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 5,635.03 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்த மோட்டார் வாகன வரி வருவாயானது 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7,149.25 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

வாகனங்களின் பதிவின் மீது மோட்டார் வாகன வரி முக்கியமாக விதிக்கப்படுவதால், வரும் ஆண்டுகளில் மேம்படுத் தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரி வசூலிப்புகள் அமையும். 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் முறையே 25.0 சதவீத மற்றும் 15.0 சதவீத வளர்ச்சி வீதம் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி அல்லாத வருவாய்

2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 15,537.24 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது இது 31.33 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. வருவாய் இனங்களை பெருக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையினாலும், வரியல்லாத வருவாய் வசூலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாலும், 2023-24 ஆம் ஆண்டில் 15.0 சதவீதமும் மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் 7.0 சதவீதமுமாக வளர்ச்சி வீதத்தில் வரியல்லாத வருவாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.