காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை மே மாதம் சந்தித்தது முதல் கடந்த இரு தினங்களுக்கு முன் ராகுல் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது வரை பலமுறை காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டுவது குறித்து பிரசாந்த் கிஷோர் இவர்களுடன் பேசியிருக்கிறார்.
பிரசாந்த் கிஷோரின் பேச்சைக் கேட்டுக்கொண்ட காங்கிரஸ் தலைமை, காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க விரும்புவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கட்சியில் இணைத்துக் கொண்டு செயலாற்றுவது குறித்தும் அவருடன் விவாதிக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் தான் சேரப்போவதாக வரும் செய்தி அனைத்தும் ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்று கூறும் பிரசாந்த் கிஷோர், கட்சியில் சேருவது குறித்தோ அல்லது இது குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்தோ நேரடியாக எந்த பதிலையும் கூறவில்லை.
நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமிக்க கட்சியின் முன்னேற்றம் என்று கூறி கட்சியின் அனைத்து மட்டங்களிலும் மாற்றத்தை கொண்டுவர துடிக்கும் கிஷோர் தன்னை ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டு செயலாற்றத் தயங்குவது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
பா.ஜ.க. தொடங்கி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., என மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு கட்சிகளுடன் பல்வேறு மாறுபட்ட கொள்கை கோட்பாடுகளின் வெற்றிக்காக பல்வேறு காலகட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தல் பிரசார உத்தி தொழில் நடத்தியவர் பிரசாந்த் கிஷோர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இவர், தற்போது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும் தொழிலையும் தொடரப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் செயல்பட்டுவரும் இவரின் அரசியல் திட்டம் என்ன என்பது குறித்து இதுவரை இவருக்கே தெளிவு இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பவாரை முன்னெடுப்பது குறித்து எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த களமிறங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோர், இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையை சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது நடந்த பேச்சுக்களில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டுவது குறித்தும் சந்தடி சாக்கில் பிரசாந்த் கிஷோர் பேசிவருவதாக தெரிகிறது, ஏற்கனவே 2017-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் இவரை நம்பி படுதோல்வி அடைந்ததை ராகுல் காந்தி இன்னுமும் மறக்கவில்லை என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.