சாரணர் சங்கம் என்றால் என்ன..?

Must read

ற்போது தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருவது சாரணர் சங்கம் தலைவர் தேர்தல் குறித்தே. இந்த சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற பாரதியஜனதாவை சேர்ந்த எச்.ராஜா களத்தில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களிடம் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை இளம் வயதிலேருந்து உருவாக்க தொடங்கப்பட்டதுன் சாரணர் இயக்கம்.

இந்த அமைப்பானது முதன்முதலில் 1907ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த “லார்டு பேடன் பவுல்’ என்று அழைக்கப்பட்ட  ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவர்தான் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார்.

சாரணத் தந்தை பேடன் பவுல் 1857ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ம் நாள் லண்டனில் பிறந்தார். 1876ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். ராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக 1907ம் ஆண்டு “பிரவுண்சீத்’ தீவில் முதன் முதலில் 20 மாணவர்களைக் கொண்டு சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

சாரண இயக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சாரணத் தந்தை 1941ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ந்தேதி காலமானார். இவருக்கு “உலக முதன்மைச் சாரணர்’ என்ற விருதும் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களால், “கில்வெல் பிரபு’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இவ்வியக்கம் 1909 ம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

சாரண அமைப்பின் மூலம் இளம்பருவத்தினரிடையே தன்னம்பிக்கை, இறைப்பற்று, நாற்றுப்பற்று, அன்பு, கருணை, பிறருக்கு உதவி செய்தல், திறன் வளர்த்தல், கைவினை பொருட்கள் செய்தல், வேட்டையாடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்கள், பிற்காலத்தில் சிறந்த மாணவர்களாகவும், நாட்டுப் பற்று மிக்கவர்களாகவும்,  பிறரைச் சகோதரர்களாக நேசிக்கும் பண்புடையவர்களாகவும், இயற்கையை நேசிக்கிற வர்களாகவும், விலங்குகளிடத்தே அன்பு காட்டுபவர்களாகவும், கட்டுப்பாடு உடையவர்களாகவும், பொதுவுடமைகளைப் பாதுகாப்பவராகவும், சிக்கனமான வர்களாகவும் எண்ணம், வாக்கு, செயல்களில் தூய்மை உடையவர்களாகவும் விளங்குவர் என்பது நம்பிக்கை.

இந்த சாரணர் இயக்கம் மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.  அது, குருளையர், சாரணர், திரிசாரணர் ஆகியவை .

சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர்கள் எனவும், சாரணியர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் “கைடு கேப்டன்கள்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சாரண, சாரணியர்களின் பல்வேறு செயல் திட்டங்களை வெளிக்கொண்டு வரும் பொருட்டு மாவட்ட அளவில் பேரணிகளும், மாநில அளவில் கேம்புரிகளும், தேசிய அளவில் நான்கு ஆண்டுகளுக்கொரு முறை அனைத்து மாநில சாரணர் இயக்கத்தினர் கலந்துகொள்ளும் முகாம்  நடத்தப்படுகின்றன.

இதில் பல்வேறு மாநில கலாசாரங்களும், நட்புறவும் பகிர்ந்து கொள்ளப்படு கின்றன. மேலும், கலாசாரங்களை வலியுறுத்தும் ஊர்வலங்களும், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நாடகங்கள்  இதில் இடம் பெறுகின்றன.

சாரண இயக்கத்தில் மாணவர்களைப் பள்ளி சூழலில் இருந்து விடுவித்து இயற்கைச் சூழலுக்கு அழைத்துச் சென்று அங்கு பயற்சிகள் கொடுக்கப்படு கின்றன. இதில் உடற்பயிற்சிகள்,முதலுதவி பயிற்சிகள் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு வகையானப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

வருடத்திற்கு ஒருமுறை சாரணர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மாநில அளவில் சாதனை படைக்கும் சாரண, சாரணியர்களுக்கு ‘ராஜ்ய புரஷ்கார்’ என்னும் மாநில விருது வழங்கப்படும்.

இந்த விருது ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் மாநில ஆளுநர் மாளிகையில் ஆளுநரால் நேரடியாக வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சாதனை படைக்கும் சாரண, சாரணியர்களுக்கு ராஷ்டிரபதி விருது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் டிடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது.

இந்த அமைப்புக்கான தலைவர் பதவியை பெரும்பாலும் மாநில கல்வி அமைச்சர்களே வகித்து வருவர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக இருந்து வந்தது.

தமிழகத்தில் சாரண இயக்கத்தின் தலைமையகம், சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில், ராணி மேரி கல்லுாரி அருகே வென்லாக் பூங்காவில் உள்ளது.

இந்த அமைப்பின்  மாநில தலைவராக தமிழக  பள்ளி கல்விதுறை அமைச்சர் இருப்பது வழக்கம். ஆனால், கடந்த திமுக ஆட்சியின்போது, அப்போதைய கல்வி அமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைவராக  இருந்தபோது, நிர்வாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை யடுத்து சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தவும், பதவிக்காலத்தை மூன்றாண்டில் இருந்து, ஐந்தாண்டாக  உயர்த்தியும் உத்தரவிட்டது.

தமிழகத்தில் சமீப காலமாக இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான்,  சாரண – சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு, முதல் முறையாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

தலைவர் பதவிக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் மணியை, உயர்மட்ட குழுவினர் பரிந்துரை செய்தனர்.

இதற்கு, சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த பதவியை கைப்பற்ற பா.ஜ. தேசிய செயலர்  எச்.ராஜாவை அவரது ஆதரவாளர்கள் முன்மொழிந்தனர்.

இதன் காரணமாக தற்போது தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இதற்கான தேர்தல்  நாளை காலை, 10:30க்கு, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல்  நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் மூலம், தலைவர், துணை தலைவர், மாவட்ட குழு உறுப்பினர்  மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சியாளர்  ஆகிய பதவிகளுக்கானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான மாவட்ட கல்வி  அதிகாரிகள், ஆசிரியர்கள் போன்றோர்  ரகசிய ஓட்டுச்சீட்டு முறையில் ஓட்டளிக்க இருக்கின்றனர்.

இந்த இயக்கத்தின் தலைவர் பதவிக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பேராசிரியர்  ஹரீஷ் எல்.மேத்தா, பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குனர்கள் லட்சுமி, மணி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள்  இயக்குனர் மணிக்கு ஆதரவு தெரிவித்து, லட்சுமி வாபஸ் பெற்றார். பின், அவர், மாணவியர் பிரிவு துணை தலைவராக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹரீஷ் எல்.மேத்தா மற்றும்  பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோரிடம், ராஜா தரப்பினர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் போட்டியில் இருந்து விலகினர்.

பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், சாரணர் இயக்க மாநில தலைமை கமிஷனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மணியும், ராஜாவும் நேரடி போட்டியில் உள்ளனர்.

இந்த தேர்தலில், ராஜா வுக்கு ஆதரவாக, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் மறைமுக பிரசாரம் நடந்து வருகிறது.

மணியை ஆதரித்து, ஆசிரியர்கள், முன்னாள் அதிகாரிகள் தரப்பில் பிரசாரம் நடக்கிறது.

பரபரப்பான இந்த தேர்தலில் தலைவர் பதவியை பிடிக்க பாரதியஜனதா கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜா போன்றவர்கள் இதுபோன்ற மாணவர் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மாணவர்களிடையே விஷமத்தை வளர்த்துவிடுவார் என்று அறிஞர்களு, கல்வியாளர்களும் அஞ்சி உள்ளனர்.

More articles

Latest article