ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பி.எஸ். தியானம் இருந்ததும், நேற்று முன்தினம் தீபா தியானம் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தியானம் என்பதே பரபரப்பான மனநிலையில் இருந்து மீள்வதற்காகத்தான் என்பார்கள்.
போகட்டும்.
சர்ச்சை என்றாலும் தியானம் என்றாலும் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர் ஜக்கி வாசுதேவ்தான். தியானம் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
கேள்வி: தியானம் என்றால் ஆசையற்ற நிலையா, எண்ணங்கள் அற்ற நிலையா? இது செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
சத்குரு( ஜக்கி): தற்போது வாழ்வின் போக்கில் மக்கள் காயம்பட்டுக் கிடக்கிறார்கள். அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஒரு நாள் இறந்து போகவும் எவ்வளவு வலியையும் வேதனையையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? ஏனென்றால், இன்னமும் உயிர்த்தன்மையோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தியானநிலையில் இருந்தால் அந்த மனிதனுக்கு துன்பம் என்பதே இருக்காது. தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.
தியானம் என்றால் என்ன?
கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பலவிஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தை குவிக்க முடியும், ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும்.
இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத் தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா?
எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாக சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள்.
எனவே ‘மனம்’ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள்தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். தியானம்- எப்படி செயல்படுகிறது? தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களை தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல.
எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல் தான். எந்தவிதமான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களோ உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளியைக் காண்கிறீர்கள்.
எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல, நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா?
இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு. வெளியிலிருந்து சேகரித்த உடல், மனம் இவற்றுக்கும் உங்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை உணர்ந்து நீங்கள் தியானத்தன்மையில் இருந்தால், அவை இரண்டையும் எப்படி உபயோகப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஆனால் அதுவே நீங்களல்ல. உங்கள் அனுபவத்தில் இந்த இரண்டோடும் அடையாளம் கொள்ளாமல் இருந்தால், துன்பம் என்பதே இருக்காது. இது ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம். ஒருவர் விருப்பத்தோடு இருந்தால் நிச்சயம் இது சாத்தியம். இந்த சூழ்நிலையை நமக்குள் எப்படி உருவாக்குவது என்பதற்கு ஒரு முழு விஞ்ஞானமே உள்ளது. எனவே இதை நாம் எல்லாவகையான மக்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள், கிராமமக்கள், படிக்காதவர்கள், மெத்தப் படித்தவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் என பலருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம். வெளிச்சூழ்நிலை என்று வரும்போது நமது திறமை என்பது வித்தியாசப்படுகிறது.
நான் செய்வதை நீங்கள் செய்ய முடியாது. நீங்கள் செய்வதை நான் செய்ய முடியாது. வெளிச்சூழல் திறன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படுகிறது. ஆனால் உள்நிலையைப் பொறுத்தவரை, எல்லோரும் ஒரேவிதமான திறனுடன் இருக்கிறோம். நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா, இல்லையா என்பது உங்களைப் பொறுத்தது. தியானம் எனும் போது எல்லோருக்கும் சமமான வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதற்கான விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? யார் அதை வேண்டாமென சொல்லப் போகிறார்கள்? எல்லோருக்கும் அதுதான் தேவை.
ஆனால் பலருக்கும் இதைப்பற்றி தெரியவில்லை என்பதுதான் விஷயம். எனவே நமது வேலை, தியானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுதான். இது ஏதோ மலைக் குகைகளுக்கு செல்வதைப் பற்றியல்ல; இமயமலைக்குச் சென்று அமர்வதைப் பற்றியல்ல; இது, துன்பங்களில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு வாழக் கற்றுக் கொள்வது. நீங்கள் விரும்பும் விதமாக வாழ்வோடு விளையாட முடியும். ஆனால் வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறு தழும்பைக் கூட ஏற்படுத்தாது.