பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து புயல் ஷோயப் அக்தர், ஒருகாலத்தில் உலகின் அதிகவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றிருந்தவர். ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ – ஷோயப் அக்தர் ஆகியோருக்கு இடையிலான யார் வேகம் என்ற போட்டியில், அக்தரே வென்றார்.
இவருக்கு, ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்ற ஒரு அடைமொழியும் உண்டு!
இவர் மொத்தமாக, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் சேர்ந்து 224 போட்டிகளை ஆடி, 444 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக ஷோயப் ‍தெரிவித்துவரும் கருத்துகள், கேட்போரின் எண்ணங்களை வேறுவிதமாக திருப்பும் வகையில் உள்ளதை மறுக்க இயலாது. அவர், வேறு எந்த நாட்டு வீரர்களை விடவும், அதிகம் இந்தியா சார்பாக பேசி வருகிறார்.
2019 உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியபோது, தன் நாட்டு அணி கேப்டனை மோசமாக விமர்சித்தார். பின்னர், அதே தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோற்றபோதும், இந்தியாவின் கடைசிநேர போராட்டத்தைப் புகழ்ந்துரைத்தார்.
பாகிஸ்தானின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும், அந்த அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்துவாகவும் இருந்த டானிஷ் கனேரியா, இன்சமாம் உல் ஹக் உள்ளிட்ட சில வீரர்களால் மதரீதியாக பாகுபாடு காட்டி நடத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டினார் அக்தர். இதன்பொருட்டு, இன்சமாம் உல் ஹக், நீண்ட மறுப்பு விளக்கம் கொடுத்தார்.
பின்னர், கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிபோது, சச்சின் டெண்டுல்கர் 98 ரன்களில் ஆட்டமிழந்து, சதத்தை நழுவ விட்டார். அதுகுறித்து சமீபத்தில் பேசிய அக்தர், “அப்போட்டியில் டெண்டுல்கர் சதமடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது” என்றார்.
இப்போது பேசியுள்ள அக்தர், “நான் விராத் கோலியின் காலத்தில் விளையாடியிருந்தால் மைதானத்தில் அவரை அதிகம் சீண்டியிருப்பேன். ஆனால், களத்தில் எதிரிகளாக நாங்கள் இருந்திருந்தாலும், வெளியே நல்ல நண்பர்களாக இருந்திருப்போம். ஏனெனில், நாங்கள் இருவருமே பஞ்சாபிகள்” என்றுள்ளார்.
ஒரு பாகிஸ்தான் வீரர், இந்தளவிற்கு தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சார்பாகவே பேசிவருவது பலருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்! ஷோயப் அக்தர் எதற்காக இந்தளவிற்கு மாறிப்போனார்? அவருக்கான தேவை என்ன? என்ற கேள்வியும் சிலருக்குள் எழத்தான் செய்கிறது!
ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலாக நடந்தபோது, அதில் மொத்தம் 11 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர். நமது ஷோயப் அக்தர், ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் இடம்பிடித்திருந்தார்.
ஆனால், அதே 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்றதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் தொடர்களில் ஏலம் எடுப்பதில்லை என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனால், பல பாகிஸ்தான் வீரர்கள் மனதளவில் நொறுங்கிப் போயினர்.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வீரர்களெல்லாம் ஐபிஎல் போட்டிகளில் ஆடி நன்றாக கல்லா கட்டும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினைகளால் இப்படி தங்களுக்கான வருமானம் அநியாயமாக பறிபோய்விட்டதே என்று அவர்கள் கடுமையாக வருந்தியிருக்கலாம். சிலர் அழுதும்கூட இருக்கலாம்! யாருக்குத் தெரியும்? ஆனால், எப்படிப் பார்த்தாலும் அவர்களின் உணர்வு நியாயமானதே!
பாகிஸ்தான் வீரர்களின் ஐபிஎல் வாய்ப்பு பறிபோன பிறகு, கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் என்ற நிலைகளில், அந்நாட்டின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சில ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கும் இந்தியாவில் சில விமர்சனங்கள் எழுந்தன.

உலகின் மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் திருவிழா என்ற அந்தஸ்தில் இருக்கிறது ஐபிஎல். உலகிலேயே அதிகம் பணம் புழங்கக்கூடிய ஒரு உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டுத் தொடராகவும் இது இருக்கிறது.
உலகின் பல வீரர்கள், எப்போது ஐபிஎல் ஏலம் தொடங்கும், தாங்கள் இந்தாண்டு எவ்வளவு விலைக்கு ஏலம் எடுக்கப்படுவோம்! என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உள்ளது என்று சொன்னால் அதில் பெரிய மிகையெல்லாம் கிடையாது!
எனவே, தனக்கு ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக, ஷோயப் அக்தர் இப்படியெல்லாம் பேசி வருகிறாரா? அல்லது ஏதோ ஒரு உணர்வில் இந்தமாதிரி பேசுகிறாரா? என்ற எண்ண அலைகள் விசிறி அடிக்கின்றன!
எது எப்படியிருந்தாலும், இந்த விஷயத்தில் ஷோயப் அக்தரைப் பற்றி எதிர்மறையாக விமர்சிப்பதற்கு எதுவுமில்லை!