இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பாலோனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், கொரோனா தடுப்பூசி மருந்துகளும் உலகளவில் அனைத்து நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக போடப்படவில்லை.

முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உரிய இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் என்ன ஆகும் என்று ஃ காவி இணைய இதழில் கேத்தரின் ஃபோலி எழுதியிருக்கும் கட்டுரையில் விவரித்திருக்கிறார்.

அமெரிக்காவில், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்விரண்டு டோஸ் தடுப்பூசிக்கும் இடையில் உள்ள கால அளவு குறித்து நாம் அச்சம் கொள்ள தேவையில்லை என்று நியூயார்கில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நோயெதிர்ப்பு சக்தி நிபுணர் டேவிட் டோபஹம் தெரிவித்துள்ளார்.

பைசர்-பயோஎன்டெக் மற்றும் மோடெர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை அமெரிக்க அரசு பயன்படுத்த அனுமதித்த போது, பைசர் நிறுவன மருந்து தன்னார்வலர்களுக்கு 21 நாள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மோடெர்னா பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு 28 நாள் இடைவெளியில் அதன் மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அடைப்படையில் இந்த கால இடைவெளி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் கிடைத்த தரவுகளை ஆராய்ந்த அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) முதல் தடுப்பூசி போட்ட நான்கு நாட்கள் முதல் 42 நாட்கள் வரை இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பதை ஒப்புக்கொண்டது.

குறித்த இடைவெளியை தாண்டி இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்து எந்த ஒரு தரவும் இல்லை என்றபோதும், அதுபோல் செய்வது தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சி.டி.சி. கருத்து தெரிவித்துள்ளது.

முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இடையே இந்த கால இடைவெளி என்பது முதல் டோஸ் போட்டவுடன், உடலை அதற்கு தயார்படுத்தி கொள்ளவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் தற்காப்பு செல்களை விழிப்படைய செய்யும் விதத்தில் செயல்படுகிறது.

உடலில் உள்ள செல்கள் ஏற்கனவே அதற்கு பழகி விட்டபடியால் இரண்டாவது டோஸ் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்பட்டு உடலை மேலும் வலுவடைய செய்கிறது.

நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் செல்களை பி-செல்கள் என்று அழைக்கின்றனர், இரண்டு டோஸ் தடுப்பூசிக்கான இடைவெளியில் இந்த பி-செல்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தை தாங்கிப் பிடிக்கிறது. சரியான இடைவெளி இல்லாவிட்டால் நோயெதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய தேவையான நேரம் இந்த பி-செல்களுக்கு கிடைப்பதில்லை, அதனால் உடல் ஆரோக்கியம் இழக்க நேரிடும்.

அதனால், மருத்துவர்கள் அறிவுறுத்தும் ஆறு வார கால இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசி தேவையான பாதுகாப்பை அளித்த போதும், பைசர், மோடெர்னா மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 10 ல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பை தடுக்கும் ஆற்றல் இருப்பது நிரூபணமாகி உள்ளது, அதேவேளையில், அஸ்ட்ராஜெனிகா மற்றும் சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் 10 ல் 7 பேருக்கு மட்டுமே கொரோனாவை எதிர்க்கும் சக்தி உள்ளது தெரியவந்துள்ளது என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.