சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ஜெ. உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வெளியே வந்த துணை முதல்வர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என்று பஞ்ச் டயலாக் பேசினார்.
இது செய்தியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், தமிழகத்தை சேர்ந்த பாஜ மத்திய அமைச்சர் பொன்னாரின், தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மாறி உள்ளது என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருப்பதாக வும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறினார்.
தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று கூறி மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்றும், தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் தமிழகத்துக்குரிய பங்கை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
தமிழக அரசின் சுகாதார காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறிய ஓபிஎஸ், தற்போது போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என்று பஞ்ச் டயலாக் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
அதிமுக அமச்சர்கள் இதுவரை மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க மறுத்து வரும் நிலையில், தற்போது ஓபிஎஸ் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.