
யாழ்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், சில அரசியல் காரணங்களுக்காக தங்களின் பூர்வீகப் பகுதிகளிலிருந்து(வடக்கு இலங்கை) வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் வாழ்க்கை, இத்தனை ஆண்டுகள் கழித்தும் மேம்படவில்லை என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
யாழ்பாண தீபகற்பம் மற்றும் மன்னார் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளிலிருந்து, தமிழ் பேசும் முஸ்லீம்கள், சில அரசியல் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். அப்போது, தங்களின் சொத்து சுகங்களை அவர்கள் அங்கேயே அப்படியே விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது.
வடபகுதியிலிருந்து வெளியேறி, புட்டாலம் போன்ற பகுதிகளில் குடியேறிய அவர்களுக்கு, வாழ்க்கை மிகவும் மோசமாக மாறியது. விவசாய நிலங்களில் சாதாரண கூலிகளாக வாழ்க்கையை ஓட்டினர். தங்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதே அவர்களுக்கு பெரும் போராட்டமாக மாறியது.
சிலர் தங்களின் பூர்வீகப் பகுதிகளுக்கு மீண்டும் திரும்பினாலும்கூட, அவர்களின் பழைய ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக கூறி, அதிகாரிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மேலும், தஞ்சம் புகுந்த இடங்களிலும், முஸ்லீம்கள் உள்ளிட்ட மக்களால் அவர்கள் அகதிகளாகவே பார்க்கப்பட்டனர்.
வடக்கிலிருந்து சுமார் 70000 முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு, புட்டாலம் போன்ற பகுதிகளில் குடியேறினர். அவர்களின் வாழ்க்கை நிலை, இன்றுவரை சவாலாகவே சென்று கொண்டுள்ளது என்று தெரிவிக்கின்றன களத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்கள்.
Patrikai.com official YouTube Channel