இந்தியா – சீனா இடையே கடந்த மாதம் முதலே லடாக் எல்லைப் பகுதியில் மோதல் இருந்துவரும் நிலையில், ஜுன் 15ம் தேதி சீன தாக்குதலில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 1 ராணுவ அதிகாரி ஆகியோர் அடக்கம்.
கடந்த1975ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய – சீன எல்லைப் பகுதி மோதலில், இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவது இதுதான் முதன்முறை என்று கூறப்படும் நிலையில், அந்த ஆண்டில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றிய ஒரு சிறிய நினைவூட்டல்.
கடந்த 1975ம் ஆண்டு சிக்கிம் என்ற தனிநாடு, இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைந்த ஆண்டாகும். ஆனால், அதை ஒரு ஆக்ரமிப்பு நடவடிக்கையாகப் பார்த்தது சீனா.
அந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கிழக்குப் பகுதியில், சீன ராணுவம் தாக்கியதில் 4 இந்திய ராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். கடந்த 1975ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.
சீன ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அஸ்ஸாம் ரைஃபிள் படையைச் சேர்ந்தவர்கள். அந்த 4 வீரர்களும் இறந்த இடம் அருணாச்சலப் பிரதேசத்தின் டுலுங்லா பாஸ். அங்கே, இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவி மறைந்திருந்த சீன வீரர்கள், ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினரை நோக்கி சுட்டதில் இந்த துயர சம்பவம் நடைபெற்றது.
சீன ராணுவ வீரர்கள் தற்காப்புக்காக சுட்டனர் என்று அந்நாட்டு அரசு கூற, சீனாவின் அப்பட்டமான ஊடுருவல் என்று இந்தியா உறுதியாக தெரிவித்தது.
அதன்பிறகு, இருநாட்டு எல்லைப் பகுதியில், உயிர்பலி நிகழும் அளவிற்கான மோதல் இப்போதுதான் ஏற்பட்டுள்ளது.