மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது சிட்டல்குச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோர்பட்கி கிராமத்தில் கடந்த 10 ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்து போனார்கள்.
வாக்குச்சாவடி எண் 126 ல் வாக்களிக்க வரிசையாக நின்று கொண்டிருந்த வாக்காளர்கள் மீது வாகனத்தில் அங்கு திடீரென்று வந்த மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் இறந்து போனதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்குப்பதிவு அன்று அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை மத்திய படையினர் தாக்கியதாக வதந்தி பரவியதை தொடர்ந்து, அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே தற்காப்புக்காக மத்திய படையினர் சுடவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று, மத்திய பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த கிராமமக்கள் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அங்கு விசாரிக்க சென்ற நியூஸ் லாண்டரி பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த கிராம மக்கள் கூறியதாவது :
சிறுவனை தாக்கிய படையினரை கிராம மக்கள் தட்டிக்கேட்ட சம்பவம் காலை 9 மணிக்கு நடந்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய படையினர் அங்கிருந்து சென்று விட்டனர், அதன் பிறகு அங்கு அமைதியான சூழலே நிலவியது.
திடீரென்று 10 மணியளவில் இரண்டு கார்களில் சீருடையில் வந்திறங்கிய மத்திய படையினர், வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் வந்து அங்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை தாக்கினர்.
பின் கண்ணிமைக்கும் நேரத்தில் வரிசையில் நின்றிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர் என்று அந்த கிராம மக்கள் கூறினர்.
பங்களாதேஷ் எல்லையோர மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இந்த வாக்குச்சாவடியில் உள்ள 900 க்கும் மேற்பட்ட வாக்காளர்களில் முஸ்லீம் வாக்காளர்களே அதிகம்.
இந்த சம்பவத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் சமியுல் ஹாக் கூறுகையில், நான் ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் எனது கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, எனது இந்த நிலைமையில் நான் வன்முறை செய்ய அங்கு சென்றதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.
இந்த பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்கள், தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் இந்த சம்பவத்தன்று இரவே ஊரை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர்.
அவர்களில், ப்ரொபேஷ் பர்மன் என்ற வயதான ஒருவரிடம் விசாரித்த போது, ஒரு வாரத்திற்கு முன்பே எங்களை வாக்களிக்க கூடாது என்று மிரட்டினர் என்று கூறினார், ஆனால் யார் மிரட்டினார்கள் என்று கூற மறுத்துவிட்டார். மேலும், 2019 தேர்தலுக்கு பிறகு எந்த தேர்தலிலும் எங்களை வாக்களிக்க விடவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பா.ஜ.க. வின் மாவட்ட தலைவர் சஞ்சய் சக்ரவர்த்தி, இங்குள்ள இந்துக்கள் அனைவரும் வாக்களித்தால் பா.ஜ.க. வெற்றி பெறும் என்பதால் அவர்களை வாக்களிக்க விடாமல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் திரிணாமுல் காங்கிரஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
சீருடையில் வந்தவர்கள் போலீசார் தானா ? அவர்கள் மத்திய படையை சேர்ந்தவர்கள் தானா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த கிராம மக்கள்
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் சாதாரண காவலர்கள் மற்றும் மத்திய படை மட்டுமே, இவர்கள் மத்திய படை அணியக்கூடிய சீருடையில் வந்தார்கள் என்று பதிலளித்தனர்.
நன்றி : நியூஸ் லாண்டரி