உருவத்தை வைத்து கேலி.. மீம்ஸ் கோஷ்டிகளை காறித்துப்பும் தம்பதி…
கொல்கத்தாவில் அர்னேஷ் மித்ரா மற்றும் எக்தா பட்டாச்சார்யா ஆகிய இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒருவரையொருவர் நேசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் படித்து, பட்டமும் பெற்று, இருவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான எல்லா தம்பதியர்களைப் போல இவர்களும், தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
புகைப்படத்தில் மணமகனான அர்னேஷ் மித்ரா உடல் பருமனுடன் இருப்பதைப் பார்த்த பலரும் அநாகரீகமான முறையில் கிண்டல் செய்துள்ளனர். மேலும் சிலர் அந்த புகைப்படத்தைத் திருடி மீம்ஸ் பக்கத்தில் பதிவிட்டுவிட, அதைப்பார்த்த பலரும் முகம் சுளிக்கும்படியான கமெண்டுகளை பகிர்ந்துள்ளனர். அதில் ஒருசிலர் மட்டுமே இவ்வாறு கிண்டல் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவையனைத்தையும் பார்த்த எக்தா கோபமுற்று அந்த மீம்ஸ் பக்கத்தைக் குறித்து ஃபேஸ்புக்கில் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் அர்னேஷ் மித்ராவோ அப்படியெல்லாம் புகார் அளிக்க வேண்டாம், அவர்களுக்கு எனக்கு கிடைத்தைப்போல அழகான மனைவி கிடைக்காத விரக்தியில் இப்படிப் பேசுகின்றனர். அவர்கள் பேசிவிட்டுப் போகட்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்ட எக்தா, “நான் அவரை காதலிக்க ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே இதுபோன்ற கேலியும் கிண்டல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சமூகம் வெறும் உடலை மட்டுமே பார்க்கிறது, மனதையும், ஒருவரின் நல்ல குணத்தையும் பார்க்கத் தவறிவிடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்னேஷ் மித்ராவோ, “இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இவ்வளவு அழகான பெண் என்னுடைய மனைவி என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. அவள் எனக்குக் குழந்தை பருவத்திலிருந்தே தோழி, என்னுடைய மிகச் சிறந்த தோழி, இன்று எனக்கு மனைவி” என்று குறிப்பிட்டுள்ளார்.
படித்தவர்கள் கூட இதுபோல கொஞ்சமும் நாகரீகமற்ற முறையில் ஒருவரது உடல்ரிதியிலான குறைகளைச் சுட்டிக்காட்டி சமூகவலைத்தளங்களில் கேலி, கிண்டல் செய்வது மிகுந்த மன வருத்தத்தையே அளிக்கிறது. கல்வி இவர்களை எந்த வகையிலும் பண்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.
– லெட்சுமி பிரியா