கொல்கத்தா: வெளிநாட்டினரின் ஊடுருவல்களை தடுக்கும் வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் எந்த தடுப்பு முகாம்களையும் அமைக்கவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை அடுத்த உத்தர்கன்யா பகுதியில், முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது: மேற்கு வங்கத்தில், எந்தவொரு குடிமக்களின் தேசிய பதிவு எனப்படும் என்ஆர்சி பயிற்சியை மேற்கொள்ள எந்த திட்டமும் இல்லை. அனைத்து அரசு அதிகாரிகள் முன்பாக மிகுந்த பொறுப்புடன் இதை கூறுகிறேன்.
அனைவரும் கூறுவது போன்று எந்தவொரு தடுப்பு முகாமையும் அமைக்கவில்லை. அதற்கான கேள்வியும் இப்போது எழவில்லை. அதை பற்றி சிந்தித்தால் மட்டுமே தடுப்பு முகாம்கள் அமைக்கப்பதற்கான வாய்ப்புகள் வரும்.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஏற்கனவே எதிர்த்திருக்கிறோம். அந்த மசோதா வந்தால், குறிப்பாக இந்தியர்கள், அதில் மேற்கு வங்க மக்களாகிய நாங்கள் 6 ஆண்டுகளுக்கு வெளிநாட்டினர்களாக கருதப்படுவர். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனால் என்ன நடக்கும் என்றார்.