கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. காகன் முர்மு என்பவர் ஆன்லைனில் புதிய மொபைல் போன் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்தவர், அதனுள் கற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.பிக்கே பெப்பே காட்டிய அந்த ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
மெற்குவங்க மாநிலத்தின் மால்டா வடக்கு தொகுதி எம்.பி. காகன் முர்மு. தீபாவளி பண்டிகையையொட்டி தற்போது ஆன்லைன் நிறுவனங்கள் பல, பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவித்து உள்ளன. இதை மனதில் கொண்டு காகன் முர்மு, தனது உறவினருக்கு தீபாவளி பரிசாக வழங்குவதற்காக பிரபல இ-காமர்ஸ் போர்ட்டலில் ரூ .11,999 க்கு செல்போனை ஆர்டர் செய்திருந்தார். கேஷ் ஆன் டெலிவரி செய்யும்படி குறிப்பிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று அவருக்கு மொபைல் போன் பார்சல் வந்தது. டெலிவரி பாயிடம், அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு பார்சலை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அந்த பார்சலை திறந்தபோது, அது வேறுஒரு மொபைலுக்கான பெட்டி என தெரிய வந்தது. அந்த பெட்டியைத் திறந்த எம்பி. அதிர்ச்சி அடைந்தார். அதனுள் இரண்டு கற்கள் மட்டுமே இருந்தன. இதனால் கடும் கோபம் அடைநத எம்பி காகன் முர்மு, தனக்கு டெலிவரி செய்த நபருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அந்த நபர், வேறொரு எண்ணைக் கொடுத்து, தொடர்பு கொள்ளுமாறு கேட்க, அந்த எண்ணுக்கு போன் செய்து விசாரித்தார்.
தன்னிடம் பேசுவது மாநிலத்தின் எம்.பி. என்பதை அறிந்துகொண்ட அந்த நிறுவனம், தவறுக்கான மன்னிப்பு கேட்டதுடன், தவறுதலாக மற்றொரு நிறுவன மொபைல் அனுப்பியதாக சல்ஜாப்பு கூறியது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த முர்மு உடனடியாக இங்கிலிஷ் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து கூறி எம்பி காகன் முர்மு, “நான் இதற்கு முன்பு ஆன்லைனில் எதையும் ஆர்டர் செய்ததில்லை. என் மகன்தான் இதுபோன்று எதையாவது ஆர்டன் செய்வான். நான் ஆன்லைனில் ஆர்டர் செய்தது, இதுதான் முதல்முறை. ஆனால் அந்த நிறுவனம் என்னை ஏமாற்றி உள்ளது.
இந்த விஷயத்தை நான் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சரிடம் தெரிவிப்பேன். என்று கூறியவர், இதுகுறித்து அந்த நிறுவனத்துடன் பேசியபோது, தவறு நேர்ந்து விட்டது என்று பல முறை மன்னிப்பு கோரினர். மேலும் தனது பணத்தை வங்கிக்கு உடனே திருப்பி அனுப்பிவிடுவதாக கூறியது. ஆனால், இதுபோல் இன்னொரு முறை மோசடி நடைபெறக்கூடாது என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.
இந்த புகார் குறித்து கூறிய மால்டா போலீஸ் கண்காணிப்பாளர் அலோக் ராஜோரியா, எம்.பி. மொபைல் வாங்கிய ஆன்லைன் நிறுவனமான “ப்ரிமா ஃபேஸி (Prima facie), கற்பனையான போர்ட்டலாக இருக்கலாம். நாங்கள் வழக்கை விசாரித்து மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். இது குறித்து பார்சல் டெலிவரி செய்த கூரியர் நபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
மால்டா வடக்கு தொகுதி பாஜக எம்.பியான காகன் முர்மு ஏற்கனவே 3முறை அந்ததொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.