கூச் பேகார், மேற்கு வங்கம்

மேற்கு வங்க பாஜக ஐடி செல் தலைவர் தீபக் தாஸ் பாஜக சார்பாக 1114 வாட்ஸ் அப் குழுக்களை நடத்தி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சமூக வலை தளங்களின் பங்கு பெருமளவில் உள்ளது.   பல கட்சிகளும் இதற்காக ஐடி செல் என்னும் அமைப்பை தொடங்கி உள்ளனர்.   ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒரு இளைஞர் இந்த அமைப்புக்களுக்கு தலைவராக நியமிக்கப்படுள்ளனர்.  அவ்வகையில் மேற்கு வங்க பாஜகவின் ஐடி செல் தலைவராக தீபக் தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீபக் தாஸ்

சுமார் 36 வயதாகும் இவர் கூச் பேகார் பகுதியை சேர்ந்தவர்.   அங்குள்ள கோபால்பூர் என்னும் சிற்றூரில் ஒரு மருந்துக் கடையை நடத்தி வருகிறார்.   இவர் குடும்ப வறுமை காரணமாக 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.    கடந்த 2014 ஆம் வருடம் பாஜகவில் இணைந்த இவர் தனது ஆண்டிராய்டு மொபைல் மூலம் பாஜகவுக்காக  சமூக வலை தளத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.

தற்போது ஐடி செல் தலைவராக உள்ள இவருக்கு கீழ் 40 பேர் இயங்கி வருகின்றனர்.   இவர்கள் அனைவரும் பாஜகவினால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களது பயிற்சி முகாமுக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இவரை ஐடி போர் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.  பாஜகவுக்காக இவர் 1114 வாட்ஸ் அப் குழுக்களை நடத்தி வருகிறார்.   இந்த குழுக்கள் மூலம் தாஸ் பாஜகவுக்காக பிரசாரம் செய்து வருகிறார்

இது குறித்து தீபக் தாஸ், “எங்களைப் போன்றவர்களால் மேற்கு வங்கத்தின் மூலை முடுக்குகளிலும் பாஜகவின் பிரசாரம் நடைபெற்று வருகிறது.   மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் பாஜகவால் நேரடி பிரசாரம் செய்ய முடிவதில்லை.   அதனால் எங்கள் உதவி கட்சிக்கு தேவையாக உள்ளது.

நான் என்னிடம் உள்ள இரு தொலைபேசி எண்கள் மூலம் 229 குழுக்களை ஒரு எண்ணிலும் 885 குழுக்களை மற்றொரு எண் மூலமும் நிர்வகித்து வருகிறேன்.  ஒவ்வொரு குழுவிலும் 40 முதல் 250 உறுப்பினர்கள் வரை உள்ளனர்.  இதில் சிலர் நீங்குகின்றனர்.  சிலர் சேர்க்கப்படுகின்ற்னர்.  நான் காலை 6 மணியில் இருந்து பணி புரிகிறேன்.   பாகிஸ்தான் விமான தாக்குதல் நேரத்டில் நாங்கள் 24 மணி நேரம் பணி புரிந்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.