பாலக்காடு

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் சுமார் 10க்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிருவன கிணற்று நீர் பெட்ரோல் போல் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் பாலக்காடு அருகே திருத்தாலா பகுதியில் கூற்றநாடு கிராமம் அமைந்துள்ளது.. இங்கு பெரும்பாலான வீடுகள், கடைகளில் கிணறுகள் உள்ளன. பொதுமக்கள் இந்த தண்ணீரைத் தான் இவர்கள் குடிநீர் உள்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள சில வீடுகள், சிபிஎம் கட்சி அலுவலகம் உள்பட சில அமைப்புகள் உள்ள கட்டிடங்களில் உள்ள கிணற்றுத் தண்ணீரில் பெட்ரோல் வாசனை அடித்தது.

அப்பகுதி மக்கள் இதனால் சந்தேகமடைந்து வாளியில் தண்ணீரை பிடித்து தீயைக் கொளுத்திப் போட்டபோது கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மளமளவென தீ பிடித்தது.   பெட்ரோலில் தீ எரிவது  போல தண்ணீரில் தீ பிடித்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைப்போல் கிணற்றில் தீயை கொளுத்திப் போட்டாலும் அதேபோல தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்த கூற்றநாடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் இதே நிலைதான் காணப்பட்டது. இது குறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ பிடிப்பதற்கான காரணம் என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்று நீரில் தீ பிடிப்பதற்கு உதவும் ஏதோ ஒரு பொருள் இருப்பதாக மட்டுமே அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய தண்ணீரைக் குடித்தால் ஏதாவது உடல் நலக் கோளாறு ஏற்படுமோ? என்ற அச்சம் இருப்பதால் அந்த பகுதியினர் கடந்த சில மாதங்களாக கிணற்று தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை.

ஒரு பெட்ரோல் பங்க் இந்த வீடுகளுக்கு அருகே அமைந்துள்ளது. அங்கிருந்த பெட்ரோலோ, டீசலோ கசிந்து கிணற்றுத் தண்ணீரில் கலந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.