வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக என்று வசூலிக்கப்பட்ட நிதி எதுவும், தேவையான காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்காக, நல நிதி வசூலிக்கப்பட்டு, அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்களால் பேணப்படும்.
உதாரணமாக, கடந்த ஆகஸ்ட் 30 வாக்கில் செளதி அரேபிய இந்திய தூதரகத்தில் இந்தியர் நலனுக்கான நிதியாக ரூ.23.58 கோடி இருந்தது. பஹ்ரைனில் ரூ.6.3 கோடியும், கத்தாரில் ரூ.3.37 கோடியும் இருந்தது.
இந்திய சமூகத்தினர் நல நிதியம் என்ற இந்த நிதியம், கடந்த 2009ம் ஆண்டு 157 நாடுகளில் உருவாக்கப்பட்டது. பேரிடர் மற்றும் நெருக்கடி காலங்களில், அந்தந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவவே இந்த நிதி.
தூதரக சேவைகள், தன்னார்வமாக வரும் நன்கொடைகள் மற்றும் இந்திய அரசின் நிதி ஆதரவு ஆகியவற்றின் மூலம் இந்த தொகை திரட்டப்படுகிறது. மேலும், தூதரக சேவைகளைப் பெறுகின்ற வெளிநாட்டவர் கொடுக்கும் பணத்தின் மூலமும் இந்த நிதி திரட்டப்படுகிறது.
ஆனால், இந்த நிதி எந்த இந்திய தூதரகத்தாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்த கொரோனா காலத்தில், வெளிநாடுகளில் வேலைபார்த்த இந்தியர்கள் சொல்லொணா துயருக்க ஆளாயினர்
பலர், தாங்கள் பணிசெய்த பல மாத ஊதியத்தைக்கூட வாங்காமல் தாயகம் திரும்பினர். பலர் ஆங்காங்கே சிக்கிக்கொண்டு தவித்தனர். ஆனால், இந்த மோசமான சூழலில், இந்தியர்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டு சேகரிக்கப்பட்ட நிதி, எந்தவகையிலும் செலவிடப்படவில்லை.
இதுதொடர்பான விபரங்கள், பல நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் கேட்கப்பட்டும், அதுதொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டன அவை. எனவே, இந்த நிதியை எப்போது பயன்படுத்துவார்கள்? அல்லது யாருக்காக பயன்படுத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி: கட்டுரையாளர் ரெஜிமோன் குட்டப்பன்