சென்னை: அயலக தமிழர்களின் நலன் காக்கும் வகையில், ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உறுப்பினர்கள் 3ஆண்டுக்கு ஒருமுறை ரூபாய் 700 கட்டினால் ரூ. 10 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு கிடைக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அயலக தமிழகர்கள், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை பெறும் வகையில் 700 ரூபாய் கட்டினால் ரூ.10 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. அரசு பணியில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் இலவசமாக வழங்கி அரசு பணியாளர் தேர்வு வாரிய தேர்வில் பங்கேற்க தயாராக்கி வருகிறது. அடுத்ததாக தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் லட்சக்கணக்கான பணியிடங்களுக்கு தமிழக அரசோடு இணைந்து பணியாளர்களை தேர்வு செய்யப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் சென்று வேலை தேடும் இளைஞர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. வெளிநாடு நிறுவனங்கள் தொடர்பாகவும், அந்த நிறுவனம் சரியான முறையில் ஊதியம் கொடுக்குமா.? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அளித்து வருகிறது. இந்தநிலையில் சொந்த ஊரில் சரியான சம்பளத்தில் வேலை கிடைக்காத இளைஞர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கின்றனர்.
குடும்பத்தை தனியாக விட்டு செல்பவர்கள், அயல்நாட்டில் உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதும், விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அப்போது மொழி தெரியாத ஊரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது.
‘அயலகத் தமிழர் நல வாரியம்’
அந்த வகையில் ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம். அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்கள், கல்வி பயில செல்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
அந்த வகையில் காப்பீட்டு திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரூ.10,00,000 காப்பீட்டு தொகைக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.700+ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். விபத்து காப்பீட்டில் சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) ரூ. 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.395+ ஜிஎஸ்டி தேர்வு செய்து கொள்ளலாம்.
13 நோய்களுக்கு சிகிச்சை
அதன் படி தங்களுக்கு தேவையான காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக 10 லட்சம் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு (Critical illness) தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் இத்திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கரோனரி ஆர்டரி பை-பாஸ் கிராப்ட்ஸ், இதய வால்வு அறுவை சிகிச்சை, பக்கவாதம், முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மாரடைப்பு, கோமா போன்ற 13 நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.