புதுடெல்லி:
புதிய விவசாய ஏற்றுமதிக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தேர்தல் நேரம் என்பதால், விவசாயிகளின் ஓட்டுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை அரசியல் கட்சியினர் அறிவார்கள். விவசாய கடனை ரத்து செய்வது, குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே நிகழக்கூடியவை.
தேர்தல் வரும்,போகும். ஆனால்,விவசாய உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
முதல்கட்ட முயற்சியாக, விவசாய உற்பத்திப் பொருள் ஏற்றுமதி கொள்கைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2022-ம் ஆண்டில் இந்திய விவசாய உற்பத்தியை ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் என இரட்டிப்பாக்குவதே புதிய கொள்கையின் முக்கிய குறிக்கோள்.
இந்திய விவசாய உற்பத்திப் பொருள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதும், அதிக மதிப்பு மற்றும் கூடுதல் மதிப்பு விவசாய ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 280 மில்லியன் டன் அளவுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்யும். உலகிலேயே சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகியவற்றுடன் அதிக அளவு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
பாசுமதி அரிசி, பருப்பு வகைகள், இஞ்சி, மிளகாய்,வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாளி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
அதேபோல், பால் பண்ணை, மீன் வளம், இறைச்சி உற்பத்தி ஆகியவற்றில், உலக அளவில் இந்தியா முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது.
அரசின் புதிய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக் கொள்கையால், உள்ளூர் உணவுப் பொருள் விலை கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி சந்தை கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தற்போது இந்தியாவின் விவசாய உற்பத்தியில் பாதியளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாசுமதி அரிசி அதிக அளவில் உற்பத்தியாகிறது.
உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் கோதுமையும், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் வாழையும்,உத்திரப் பிரதேசம் மற்றும் ஆந்திராவில் மாம்பழமும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது.
தற்போதைய நிலையில், விவசாய பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா இன்னும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.
இன்னும் 4 ஆண்டுகளில் ஏற்றுமதியை இருமடங்காக உயர்த்தும்பட்சத்தில், இது சாத்தியமாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.