மேஷம்

பேச்சில் நிதானம் கட்டாயமாய்க் கண்டிப்பாய் ஷ்யூராய் நிச்சயமாய்த் தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் இப்படித்தான் இருப்பேன் இதுதான் நான் உனக்கென்ன என்கிற ரீதியில் பேசவே கூடாது. இதை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். பாதி வெற்றி. பல காலம் வராத தொகையெல்லாம் வழிவிசாரிச்சுக்கிட்டு அட்ரஸ் தேடிக்கிட்டு உங்களை வந்தடையும். அலுவலகத்தில் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாய் சம்பள உயர்வு தருவாங்க. சகோதர சகோதரிகளுக்குப் பிரச்சினை வந்து நீங்கதாய் ஓடிப்போய் அதைத் தீர்ப்பீங்க

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 27 வரை.   

ரிஷபம்

செலவுகள் வந்தாலும் எல்லாம் ஹாப்பி செலவுகள்தான். அதனால் நன்மைகள்தான். சுபமான செலவுகள் செய்வீங்க. மனசில் நல்ல எண்ணங்கள் எழுமாறு பார்த்துக்குங்க. யார் எந்த வகையில் உங்களைக் கெட்டது செய்யத் தூண்டினாலும் “ஸாரி..நோ..தாங்க்ஸ்” என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே விலகிடுங்க. இல்லாட்டி அதில் மாட்டிக்கிட்டு அப்புறம் பிரச்சினையாகும். உங்கள் தாய்க்குப் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். அலுவலகத்தில் அவங்களைக் கைதட்டிப் பாராட்டுவாங்க. குழந்தைங்க மெகா சாதனை செய்து மகா பெருமையடைவாங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 27 முதல் செப்டம்பர் 29 வரை   

மிதுனம்

பேச்சு என்ற ஒன்றையே மறந்துடுங்க. குறிப்பாய் வம்புப்பேச்சை. யாரைப் பற்றியும் யாரிட மும் விமர்சனம் செய்யாதீங்க. ஒன்று சொல்லப்போக வேறாகும். நீங்க என்ன சொன்னாலும் அதைத் தப்பாய்ப் புரிஞ்சுக்க ஒரு கும்பலே காத்திருக்கும். சகோதர சகோதரி களுக்குப் புகழும் பெருமையும் அதிகரிக்கும். பாராட்டுப்பெறுவாங்க. அவங்களோட சண்டை வருவதற்கு எந்தக் காரணத்தையும் ஏற்படுத்திக்காதீங்க. அவங்க ஏதாவது உங்களைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு வருத்தப்பட்டாலும் மென்மையாப் பேசி அவங்க வருத்தத்தை மாற்றப்பாருங்க.

கடகம்

உடல் நலம் சரியில்லை என்றால் பெரிதாய் வருத்தப்பட வேண்டாம். முறையான சிகிச்சை யில் நன்றாய்ச் சரியாகும். எதற்கெடுத்தாலும் மனசில் பயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு இடம் கொடுக்காதீங்க. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பி ருக்கும்படியான ரசாயனங்களில் பணி புரிபவர்கள் சற்று அதிக முன்னேற்பாடும் கவனமும் கொள்வது நல்லது. கணவர்- மனைவி வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்பட்டால் தடுக்காதீங்க. அவருக்கு நன்மை ஏற்பட அது வழிவகை செய்யும். அந்த நன்மை உடனடியாகவும் இருக்கலாம் சில காலம் கழித்தும் இருக்கலாம்.

சிம்மம்

உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பாராட்டும் புகழ் வெளிச்சமும் உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். பல காலம் அடைந்திருந்த கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்க ஆரம்பிக்கும். உங்கள் பேச்சில் (வழக்கம்போல்) மிகுந்த புத்திசாலித்தனம் பளிச்சிடும். அதனால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக அலுவலகத்தில் வியாபாரத்தை அதிகரித்துக் கொடுப்பீங்க. தந்தை வழி உறவினர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் கூடியிருந்து மகிழவும் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து தங்கவும் நீங்க அவங்க வீட்டுக்குப் போய்த் தங்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தைவழிப்பாட்டன் சொத்தும் வரக்கூடும்.  

கன்னி

உங்களின் மிகுந்த புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் காரணமாக வாழ்க்கைத் தரம் உயரும். குறிப்பாக நீங்கள் பிசினஸ் செய்பவர் என்றால் அது வெற்றிகரமாக நிறைவேறும். ஆனால் இப்போது புதிதாக எந்தத் தொழிலும் துவங்க உகந்த நேரம் அல்ல. நிறைய செலவுகள் வரும். ஆடை அணி மணிகள் ஆபரணங்களின் சேர்க்கை நிகழும். பேச்சினால் பெரிய நன்மைகள் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தன்னிச்சையாய் நிகழும். குழந்தைக்காகக் காத்திருந்தவர்களுக்குக் குழந்தைபிறக்கும். திருமணத்திற்காகக் காத்திருந்தவர்களுக்குத் திருமணம் நடைபெறும்.

துலாம்

குழந்தைகளால் நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படும், சிலருக்குக் குழந்தையே ஏற்படும். கணவர் அல்லது மனைவிக்கு நன்மையும் முன்னேற்றமும் ஏற்படும். தந்தை வழி உறவினர்களுக்காகவும் தந்தைக்காகவும் செலவு செய்ய நேர்தாலும் அது பற்றி வருத்தம் ஏதும் ஏற்படாது. மகிழ்ச்சியே ஏற்படும். அல்லது திருப்தி உண்டாகும். அவசரப்பட்டுப் பேச வேண்டாம் என்பது தவிர உங்களுக்குப் பெரிதாய் அறிவுரை ஏதும் சொல்ல வேண்டாம் என்று நவகிரகங்கள் நினைக்கிறார்கள். கலை உலகில்  தொழில் செய்வோருக்கு மிகவும் லாபமான காலகட்டம் இது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்

விருச்சிகம்

தந்தைவழிப் பாட்டன் சொத்துகள் வரும். அரசாங்கத்தால் நன்மையும் லாபமும் ஏற்படும். புத்தகம் , எழுது பொருட்கள் ஆகியவை விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் நன்மையும் ஏற்படும். நல்ல நல்ல சுப காரியங்களுக்காகச் செலவுகள் செய்வீங்க. பாவச்செயல்கள் செய்வது குறையும். தந்தைக்கு வெளிநாட்டு யோகம் அதிகரிக்கும். வருமானம் கூடும். சகோதர சகோதரிகளுக்கு சிறு சிரமங்கள் ஏற்பட்டு அவற்றை நீங்கள் போய்த் தீர்ப்பீர்கள். எனவே அவர்களின் நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் பாத்திரமாகி நன்றி பாராட்டுவாங்க.

தனுசு

திடீர் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீங்க. குறிப்பாக கல்வி சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு மிக நிறைய நன்மைகள் ஏற்படும். பேச்சில் இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு கவனம் தேவை. எதைப் பேசலாம் எதைப் பேசக்கூடாது என்று நன்றாக யோசித்துப் பேச வேண்டும். அப்படி இல்லைன்னா நீங்கதான் மாட்டிக்கிட்டு முழிப்பீங்க. ஜாக்கிரதை. ஆரோக்யத்தை அலட்சியம் செய்ய மாட்டீர்கள்தான், ஆனால் ஆரோக்யத்தைக் கெடுத்துக்க உதவும் கெட்ட பழக்கங்களை விட முடியாமல் தவிப்பீங்க. வெட்டித் தள்ளுங்க அந்தப் பழக்கத்தை.

மகரம்

இத்தனை நாள் ராஜா மாதிரி / அல்லது ராணி மாதிரிக் காலம் கழிச்சுட்டீங்க. இனி கொஞ்சம் மாற்றங்களைச் சந்திக்கத் தயாரா இருக்கணும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட்டால் உடனே துவண்டு போயிடாதீங்க. எல்லாம் இயல்புதான். உத்யோகத்தில் முழு கவனத்தைச் செலுத்துங்க. வேலையில் அலட்சியம் வேண்டாம். அலுவலகத்தில் உங்க வேலையை இன்னொருவர் செய்யச் சொல்லவும் வேண்டாம். அடுத்தவங்க வேலையை நீங்க செய்யவும் வேண்டாம். உங்க அப்பாவுக்குப் புகழும் பெருமையும் கிடைக்கும். அவர் மேடையில் ஜொலிக்கும்போது மற்றவர்களுடன் சேர்ந்து நீங்களும் கை தட்டுவீங்க.

கும்பம்

அப்பாடா. எவ்வளவு இனிய காலம் ஆரம்பித்துவிட்டது. இத்தனை நாட்கள் நீங்கள் சந்தித்த புழுக்கங்களெல்லாம் இப்போது தென்றலாக மாறி உங்களை வருடும். அதிருஷ்டம் என்ற சொல்லையே சில மாதங்களாகச் சுவைக்காமல் இருந்த நீங்கள் இப்போது நொடிக்கு நூறு முறை இப்போதைய லக்-குக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பீங்க. அப்பாவின் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்புமுனை ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். கணவரும் மனைவியும் இதுபோல் ஒற்றுமையாய் இருந்து எவ்வளவு காலமாயிற்று என்று நீங்களே வியப்பீங்க.

மீனம்

பொறுமையா இருங்க. எதுக்கெடுத்தாலும் அவசரம் காண்பித்தால் எப்படி? வெளிநாட்டில் உங்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது உங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். குழந்தைகள் படிப்பதற்காகவேனும் வெளிநாடு செல்வார்கள். வயிறு மற்றும் ஜீரண உறுப்புகள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாதபடி சாப்பாட்டு விஷயத்தில் கவனமாக இருங்கள். கோயில்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால் அதில் சிறு தாமதங்கள் ஏற்படக்கூடும். உடனே டென்ஷன் ஆயிடாதீங்க.அதுவும் இறைவன் விருப்பம் என்று அமைதியா இருங்க.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 24 வரை