ஸ்ரீஹரிகோட்டா: வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் செயற்கை கோளுடன்  இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14 விண்கலம். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, விண்ணில் பறக்க தயாராக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,  வானிலைலை மாறுபாடுகளை கண்காணிக்க இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கை கோள்  ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை பிப்.17)  மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஏற்கனவே வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான  பல செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. அதன் மேம்பட்ட வகையிலான , அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. மொத்தம் 2,275 கிலோ எடை கொண்ட இன்சாட் – 3டிஎஸ் செயற்கைக்கோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு முன்பு இஸ்ரோ சாா்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இன்சாட்-3டி மற்றும் 3 டிஆா் திட்டங்களின் தொடா்ச்சியாக தற்போது இன்சாட்-3டிஎஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கை கோள்  ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம்  இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  இதற்கான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கவுன்ட்டவுன்: ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுன்ட்டவுன்  நேற்று  மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது.