சென்னை:

குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதால்,  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய பெருங்கடல், இலங்கை, மாலத்தீவுகள் அருகே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில்  நிலவுவதால் கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா,தென் கேரள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால்,  பலத்த காற்று வீசக்கூடும்.

இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி   அடுத்த 36 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே தாழ்வு மண்டலமாக மாறுகிறது.

இதன் காரணமாக  குமரிக்கடல், கேரளாவின் தெற்கு பகுதி, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக லட்சத்தீவு, கேரளாவின் தெற்கு பகுதி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த   குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.