மும்பை

தேசிய வாத காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் இணையாது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.   இந்த கூட்டணி கடும் தோல்வியை சந்தித்தது.   மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற பாஜக அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை திடீர் என சந்தித்தார்.   இந்த சந்திப்பு சரத் பவாரின் டில்லி இல்லத்தில் நடைபெற்றது.    அதை ஒட்டி இரு கட்சிகளும் இணைய உள்ளதாக தகவல்கள் வந்தன.

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற குறைவான உறுப்பினர்கள் காங்கிரசில் உள்ளதால் இரு கட்சிகளும் இணைவதன் மூலம் போதுமான எண்ணிக்கை கிடைக்கும் எனவும் சரத் பவாருக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி அளிக்க காங்கிரஸ் தயாராக உள்ளதாகவும் தகவல்களில் கூறப்பட்டது.

இது குறித்து சரத் பவார், “நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் விளைவுகள் குறித்து விவாதிக்க ராகுல் காந்தி எனது இல்லத்துக்கு வந்தார்.  அத்துடன் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்வது குறித்து விவாதித்தோம்.  இரு கட்சிகள் இணைப்பு குறித்து நாங்கள் பேசவில்லை.  இவை ஆதாரமற்ற வதந்திகள் ஆகும்” என தெரிவித்துள்ளர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், “இரு கட்சிகள் இணையப் போவதாக வந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.   இன்னும் சொல்லப் போனால்  இணைப்ப்பு குறித்த எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.   இவ்வாறு முயற்சி நடப்பதாக ஒரு சிலர் கதை கட்டி விட்டுள்ளனர்.” என தெரிவித்தார்.