டில்லி

மோடி அரசின் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பி எஸ் என் எல் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி திட்டங்களால் ஏற்கனவே பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. பி எஸ் என் எல் மற்றும் அதன் துணை நிறுவனமாக எம் டி என் எல் நிறுவனங்கள் சமீபத்தில் விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை . மோடி அரசின் பரிந்துரைப்படி அளிக்க உள்ளன.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் படி நிறுவன செலவுகளை குறைக்க மோடி அரசு ஆட்குறைப்பு நடக்க உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. மொத்தமுள்ள 1.74 லட்சம் ஊழியர்களில் 54,541 பேர் அதாவது 31% பேர் பணி இழக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் பணி ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது பி எஸ் என் எல் ஊழியர்களிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “மோடி அரசின் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தால் 54000 ஊழியர்களின் குடும்ப எதிர்காலம் பெருமளவில் பாதிக்கப்படும். மோடி அரசு இந்த பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவன ஊழியர்களிடம் இருந்து பணியை பறித்து நிறுவனங்களுக்கு அழிவை உண்டாக்கி தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க எண்ணுகிறது. மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்” என கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் பி எஸ் என் எல் நிறுவன ஊழியர்கள் சுமார் 5000 பேர் டில்லியில் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது  தொழிற்சங்க தலைவர் அபிமன்யு, “எங்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப நாங்கள் இறுதி வரை போராடுவோம். மோடி அரசு பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் போன்ற அரசு நிறுவனங்களை அழித்து தனியாரிடம் அளிக்க இவ்வாறு விருப்ப ஓய்வு திடத்தை கொண்டு வந்துள்ளது. இதை நாங்கள் அனுமதிக்கமட்டோம். தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.